பேரா மாநில அரசாங்கம் மேம்பாட்டு நோக்கங்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை பறை சாற்றிக் கொள்ளும் தனது எல்லாப் பதாதைகளையும் அகற்றி விட்டதாக அந்த மாநில பக்காத்தான் ராக்யாட் கூறியுள்ளது.
அந்தப் பதாதைகள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் அவை அகற்றப்பட்டுள்ளன.
அந்த நிலம் அனைத்தும் அதன் சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலைக்கு எதிரான கண்டனங்களை
பிஎன் பேராக் அரசாங்கம் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அவை அகற்றப்பட்டன என்று
அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி தெரிவித்தது.
அந்தத் தகவலை இன்று நிருபர்களிடம் பேராக் பக்காத்தான் தலைவர் நிஜார் ஜமாலுதின், செயலாளர் கைருதின் அப்துல் மாலிக், பேரா டிஏபி தலைவர் ங்கே கூ காம், பேராக் பாஸ் தேர்தல் இயக்குநர் அஸ்முனி அல்வி ஆகியோர் அறிவித்தனர்.
வீடமைப்பு, தொழிலியல், விவசாய நோக்கங்களுக்காக மொத்தம் 112,546.7 ஏக்கர் நிலம் பொது மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஒரு பதாதையின் படத்தில் பெருமிதமாக எழுதப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதாம் தொடக்கம் பேராக் முழுவதும் வைக்கப்பட்ட அந்தப் பதாதைகள் நாடாளுமன்றம்
கலைக்கப்படுவதாக பரமாரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக மார்ச் மாத பிற்பகுதியில் காணாமல் போய் விட்டதாக கைருதின் பின்னர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களில் மாநில அரசாங்கத்திடமிருந்து நிலத்தைப் பெற்றதாக ஒரு சாதாரண குடிமகன் கூட
தங்களிடம் கூறியதில்லை என நிஜார் நிருபர்களிடம் கூறினார்.
மிக மலிவான விலையில் தனது சேவகர்களுக்கு மாநில அரசாங்கம் அரசு நிலைத்தை கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
“அந்த 112,000 ஏக்கர் நிலம் யாருக்குக் கிடைத்தது என நாங்க கடந்த இரண்டு வாரங்களாக மாநில
அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு வருகிறோம். ஆனால் மாநில பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் டாக்டர்
ஜாம்ரி அப்துல் காதிரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அதற்கான பதில் ‘சேவகர்களுக்கு’ என இருக்க
வேண்டும்.”
“ஆகவே அதனால் தான் மாநில நில விநியோகம் மீது பெருமையடித்துக் கொள்ளும் பதாதைகளை
அனைத்தையும் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,” என நிஜார் சொன்னார்.