பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, தேர்தல் மோசடி என்று கூறப்படும் விவகாரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழு தேர்தல் மோசடி நிகழ்திருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ள 27 இடங்களில் அதன் புலன் விசாரணையை மேற்கொள்ளும்.
அவற்றில் 19 இடங்கள் பிகேஆர் போட்டியிட்ட தொகுதிகளாகும். மற்றவை பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளான டிஏபியும் பாஸும் போட்டியிட்டவை.
பிகேஆர், பின்வரும் இடங்களில் குறுகிய பெரும்பான்மையில் தோல்வி கண்டது: பராம், பாசிர் கூடாங், மாச்சாங், கெதெரே, பாகான் செராய், கோட்டா மருடு, பியுஃபோர்ட், சித்தியாவங்சா, செகாமாட், லெடாங், பாலிக் பூலாவ், கூலிம் பண்டார் பாரு, மூவார், ஹுலு சிலாங்கூர், சாபாக் பெர்னம், மெர்போக், பென்சியாங்கான், தெப்ராவ், சராதோக்.
டிஏபி, பெந்தோங், லாபிஸ் ஆகிய இடங்களில் தோற்றது. பாஸுக்கு கோலா சிலாங்கூர், சுங்கை புசார், தித்திவங்சா, பூலாய், கோலா கங்சார், பெண்டாங் ஆகிய இடங்களில் தோல்வி ஏற்பட்டது.
மே 5, 13வது பொதுத் தேர்தலில் பிஎன் 133 இடங்களையும் பக்காத்தான் 89 இடங்களையும் வென்றன.
ஆராயப்படும் இந்த 27 இடங்களிலும் பக்காத்தான் வெற்றிபெற்றிருந்தால் அது மத்திய அரசாங்கத்தை அமைத்திருக்கும்.
‘Siasat PRU13’ (பொதுத் தேர்தல் புலனாய்வுக்குழு) என்றழைக்கப்படும் தம் குழு தேர்தல் முறைகேடுகள் குறித்து 237 புகார்களைப் பெற்றிருப்பதாக ரபிஸி கூறினார்.
இப்புகார்கள் தொடர்பில் சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்த ரபிஸி, அப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என்றார்.
இந்த 27 நாடாளுமன்றத் தொகுதிகள் போக, கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகளிலும் இதேபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அக்குழுவினர் நாடாளுமன்றத் தொகுதிகளில்தான் கவனம் செலுத்துவர். 67-தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். தன்னார்வலர்களில் கணக்காய்வாளர்கள், வழக்குரைஞர்கள் முதலானோர் உள்ளிட்டிருக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் குறித்த முறையீடுகளை, முடிவுகள் அரசு இதழில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்ற 21 நாள்களுக்குள் செய்தாக வேண்டும்.
வாக்களிப்பில் ஆறு வகை குற்றங்கள்
பொதுத் தேர்தலில் நிகழ்ந்த குற்றச்செயல்களை அல்லது மோசடிகளை ஆறு வகைகளாக பிரித்திருப்பதாக ரபிஸி கூறினார்.
-சட்டப்பூர்வ வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை; ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தது.
– பிஎன் ரொக்கப்பணம் அல்லது பற்றுச்சீட்டுகள் கொடுத்து வாக்குகளை வாங்கியுள்ளது.
-முகவரிகளை வைத்து வாக்காளர்களை அடையாளம் காண முடியவில்லை. அந்த முகவரிகளைக் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
-அழியா மையை அழீக்க முடிந்தது.
-வாக்குகளை எண்ணுவதற்குமுன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாரம் 14-இல் கையொப்பம் இட்டனர். ஆனால், அதை வேட்பாளர்களிடம் கொடுக்கவில்லை.
-வெளிநாட்டவருக்கு வாக்களிப்பதற்கு வசதியாக அடையாள அட்டை கொடுப்பட்டுள்ளது.
பிகேஆருக்கு, வழக்கமாக அஞ்சல் வாக்குகளில் 20-30 விழுக்காடு கிடைத்து விடும். ஆனால், அண்மைய தேர்தலில் அது 10- 15 விழுக்காடாக குறைந்தது என்றும் ரபிஸி தெரிவித்தார்.
“ஏதோ தவறு நடந்துள்ளது. அவர்கள் வாக்களித்த பின்னர் வினவியபோது 50 விழுக்காட்டினர் எங்களுக்கு வாக்களித்ததாகத்தான் கூறினர். ஆனால், தேர்தல் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. முன்கூட்டிய வாக்களிப்பு முறையின்கீழ் எங்களுக்கு 10-15 விழுக்காடு வாக்குகள்தான் கிடைத்தன. இதுவே எங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள வாக்குகளில் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட வாக்குகளாகும்”, என்றாரவர்.