ஏர் ஏசியாவைப் புறக்கணிக்குமாறு அம்னோ மூத்த உறுப்பினர்கள் வேண்டுகோள்

utusanஅம்னோ உறுப்பினர்கள் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஏர் ஏசியாவையும் ஏர் ஏசியா  எக்ஸ்-ஸையும் புறக்கணிக்க வேண்டும் என அம்னோ மூத்த உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டுக்  கொண்டுள்ளது.

‘Apa lagi Cina mahu?’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும் ?) என்னும் தலைப்பில் உத்துசான்  மலேசியா இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட இனவாத செய்தி எனக் கூறப்படுவதற்கு எதிராக  ஏசியா எக்ஸ்-ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானி கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தக் குழு அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உத்துசானை அஸ்ரான் கண்டித்திருப்பது அவர் தமது சொந்த மலாய் இனத்தை அதுவும் அது பல
தரப்புக்களிடமிருந்து நெருக்குதலை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் சிறுமைப்படுத்துவதற்கு சமமாகும் என அந்தக் குழுவின் செயலாளர் முஸ்தாபா யாகோப் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அஸ்ரான் அறிக்கை மலாய்க்காரர்களை இழிவுபடுத்துகின்றது. ஏசியா எக்ஸ் அவரைத் தண்டிக்கப்
போவதில்லை. அதனால் ஏர் ஏசியாவையும் ஏர் ஏசியா எக்ஸ்-ஸையும் புறக்கணிப்பதின் மூலம் அம்னோ உறுப்பினர்கள் அதனைச் செய்ய வேண்டும்.”

“எங்களைப் பொறுத்த வரையில் தமது இனத்தை மறந்து விட்ட ஒரு மலாய்க்காரர். நன்றியில்லதாவர்
எனக் கூறப்பட வேண்டிய மலாய்க்காரர் அவர்.”

“தங்கள் இனத்தை அடகு வைக்கும் நிலைக்குச் சென்று மலாய்க்காரர்கள் தங்கள் அடையாளத்தை
இழப்பதற்கு இது போன்ற தனிநபர்கள் வழி கோலுகின்றனர்,” என முஸ்தாபா சொன்னதாக உத்துசானின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

உத்துசான் ஏர் ஏசியா விளம்பரத்தைப் புறக்கணிக்கும்

உத்துசான் மலேசியா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அந்த தலைப்புச் செய்தி குறித்த தமது வெறுப்பை
அஸ்ரான் வெளிப்படையாகத் தெரிவித்த பின்னர் பல மலாய், முஸ்லிம் அமைப்புகள் அவரை கண்டித்து வருகின்றன.

தமது அறிக்கை “பெரிதும் மிகைப்படுத்தப்பட்டு விட்டதாக” அஸ்ரான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஸ்ரான் மன்னிப்புக் கேட்கும் வரையில் ஏர் ஏசியா விளம்பரங்களை உத்துசான்
நிராகரிக்கும் என மிங்குவான் மலேசியா கட்டுரையாளர் அவாங் செலாமாட் எழுதியுள்ளார்.

“ஏர் ஏசியா இல்லாவிட்டால் அவாங் செலாமாட்டுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும்
கொடுக்கப்படும் விளம்பரங்களின் மதிப்பும் மிகச் சிறியது. மூலிகை, முடி ஒப்பனை விளம்பரங்கள் வழி கிடைக்கும் வருமானத்தை விடக் குறைவு,” என மூன்றாவது நபர் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளர் சொன்னார்.

என்றாலும் உத்துசான் ஆசிரியர்களுக்கான புனை பெயர் அவாங் செலாமாட் எனக் கூறப்படுகின்றது.

TAGS: