லிங்: மசீச ஆண்டுக்கூட்டம்தான் தலைவரை அகற்ற முடியும்

mcaமசீசவின் மூத்த உறுப்பினர்கள் 15 பேர், கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் உடனடியாக பதவி விலகக் கோரிக்கை விடுத்திருக்கும் நேரத்தில் முன்னாள் தலைவர்  லிங் லியோங் சிக்  வேறு வகை கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தலைவரைப் பதவி இறக்க வேண்டுமானால், ஆண்டுக்கூட்டத்தில் (ஏஜிஎம்) மட்டுமே அதற்கான முடிவைச் செய்ய முடியும் என்று லிங் கூறினார்.

“ஏஜிஎம்தான் அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்தது. அதனால் ஏஜிஎம் மட்டுமே அவரைப் பதவியிலிருந்து அகற்ற முடியும்” என செய்தியாளர் கூட்டமொன்றில் லிங் கூறினார்.

mca1அப்படியானால் சுவாவுக்குப் பின்னர் தலைவர் ஆவதற்குப் பொருத்தமானர் யார்?  எவரையும் அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. அதையும் ஏஜிஎம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

2008 பொதுத் தேர்தலில் 15 நாடாளுமன்ற இடங்களையும் 31 சட்டமன்ற இடங்களையும் பெற்ற மசீச 2013 தேர்தலில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 11 சட்டமன்ற இடங்களிலும்தான் வென்றது.

தேர்தல்  முடிவு 2008-டைவிட மோசமாக இருந்தால் அரசாங்கப் பதவி எதனையும் ஏற்பதில்லை என்று அக்கட்சி முடிவு செய்திருந்தது.

‘அடிநிலை மக்களுக்குச் சேவை தேவை’

மசீச அடிநிலை தலைவர்களை கிராமத் தலைவர்களாகவும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் லிங் கேட்டுக்கொண்டார்.

“இது ஒரு பெரிய கட்சி. இதற்கு நாடு முழுக்க சேவை மையங்கள் உண்டு. நூற்றுக்கணக்கானவர் கிராமத் தலைவர்களாகவும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்களாகவும் உள்ளனர்.

“அவர்களுக்கென்று தனி பொறுப்பு இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்கள் கடுமையாக உழைத்து நல்ல சேவை வழங்கினால் எதிர்காலம் சிறப்பாக அமையலாம்.

“அதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருவோர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவகாரம் வேறு”, என்றாரவர்.

TAGS: