பல்கலைக்கழக மாணவர் ஆடாம் அட்லி அப்துல் ஹாலிம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கோரிக்கை விடுத்ததன்வழி தேச நிந்தனைக் குற்றம் இழைத்துள்ளார் என இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை மறுத்த சமூக ஆர்வலரான ஆடாம் அட்லி, குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார்.
ஆடாம் அலி மீதான குற்றப்பத்திரிகை, அவர் தேச நிந்தனை உரையாற்றியதாகவும் அதில் சட்டத்துக்குப் புறம்பான வழியில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று மலேசியர்களைத் தூண்டிவிட்டார் என்றும் கூறியது.
நீதிபதி நோர்ஷரிடா ஆவாங் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில், ஆடாம் அலிக்காக அம்பிகா ஸ்ரீநிவாசனும் என். சுரேந்திரனும் ஆஜரானார்கள். அரசுத் தரப்பை அபார்ஸாபி முகம்மட் அப்பாஸ் பிரதிநிதித்தார்.
ரிம5,000 பிணைப்பணத்தில் ஆடாம் அலியை விடுவித்த நீதிமன்றம் ஜூலை 2-இல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றது.
தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1), குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்படுவோருக்கு மூன்றாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை அல்லது கூடின பட்சம் ரிம5,000 அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க வகை செய்கிறது.
ஆடாம் அலி தரப்பில், வழக்கைத் தள்ளுபடி செய்ய எதிர்மனு செய்துகொள்ளப்படும். போலீசாரின் விசாரணை சரியில்லை என்றும் இது தேர்ந்தெடுத்து தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் அது குறிப்பிட்டது.