ஹுடுட் சட்ட அமலாக்கம் பக்காத்தான் கூட்டணியின் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல என்பதை கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அந்தக் கூட்டணியின் உயர் நிலைக் கூட்டம் உறுதிப்படுத்தியது.
டிஏபி தலைமையகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் எண்ணியிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று தகவல் வெளியிட்டார்.
2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுக் கொள்கை வடிவமைப்பு, 2010ம் ஆண்டின் புக்கு ஜிங்கா என்னும் ஆரஞ்சுப் புத்தகம், செப்டம்பர் 28ம் தேதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கை ஆகியவற்றில் ஹுடுட் சட்ட அமலாக்கம் சேர்க்கப்படவில்லை. அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலுக்கான பக்காத்தான் கூட்டணியின் ஏற்பாடுகளிலும் அது இடம் பெறவில்லை.
“அனைத்து மூன்று கட்சிகளின் ஒப்புதலுடன் பொது இணக்க அடிப்படையில் மட்டுமே எந்த ஒரு கொள்கை மாற்றமும் செய்யப்படும்,,” என்றும் லிம் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் பற்றிய ஊகங்கள் நேற்று பரவத் தொடங்கிய பின்னர் லிம்-மின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்தச் சந்திப்பில் 1993ம் ஆண்டுக்கான கிளந்தான் ஷாரியா கிரிமினல் சட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“ஹுடுட் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்ற டிஏபி நிலையை அந்தக் கூட்டத்தில் டிஏபி வலியுறுத்தியது. அத்துடன் ஹுடுட் சட்டம் கூட்டரசு அரசியமைப்புக்கு ஏற்பவும் இல்லை.”
“ஹுடுட் சட்டம் மீது இணக்கம் இல்லை என்பதை டிஏபி-யும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டதாக அந்தக் கூட்டம் முடிவு செய்தது”, என்றும் லிம் குறிப்பிட்டார்.