பதவியைப் புறக்கணிக்க மஇகா ஒன்றும் மசீச-வைப்போல் பணக்காரக் கட்சி அல்லவே’

1 mic‘மஇகா, பேராக் ஆட்சிக்குழுவில் அளிக்கப்படும் இடங்களை அவசரப்பட்டு நிராகரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மஇகா வியூக இயக்குனர் வேள்பாரி, அக்கட்சி மசீச-வைப்போல் “பொருளாதார வலுவுள்ள” கட்சி அல்ல என்றார்.

“மஇகா ஒன்றும் மசீச அல்ல. மசீச அப்படிப்பட்ட நிலைபாட்டைக் கடைப்பிடிக்கலாம். சீனர் சமூகம் பொருளாதார வலு படைத்தது. அச் சமூகத்துக்கு உதவ பல என்ஜிஓ-கள் இருக்கின்றன.

“வெளிப்படையாகவே சொல்கிறேன், சட்டமன்றத் தலைவர் பதவியால் யாருக்கு நன்மை என்றால் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுபவருக்கு மட்டும்தான். சமூகத்துக்கு அதனால் நன்மை இல்லை”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மஇகா முன்னாள் தலைவர் எஸ். சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரி, பேராக் சட்டமன்றத் தலைவர் பதவி  மஇகா-வுக்கு வழங்கப்படாவிட்டால் அந்த மாநில அரசாங்கப் பதவிகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மஇகா தலைவர்  ஜி. பழனிவேல் மருட்டியுள்ளதைத் தவறென்றார். “ஈகோ” காரணமாக  கிடைக்கும் வாய்ப்புகளை இழந்துவிடக்கூடாது.

“ஒரு நிலைபாட்டை எடுக்கிறோம் என்றால் அது சமூகத்துக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். ஈகோ பேச்செல்லாம் கூடாது.

1 mic pala“சட்டமன்றத் தலைவர் பதவியைக் காரணம் காட்டி மஇகா தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நம் சமூகத்துக்கும் கிடைப்பதைக் கிடைக்காதபடி செய்துவிடக்கூடாது”, என்றார்.

சனிக்கிழமை, பழனிவேல் (வலம்) பேரா மாநில சட்டமன்றத் தலைவர் பதவி மஇகா-வுக்கு உரியது என்றும் அது மறுக்கப்பட்டால்  மாநில அரசாங்கப் பதவிகள் எதனையும் மஇகா ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறியிருந்தார்.

அது கிடைக்காவிட்டால், “மஇகா பேராக்கில் பிஎன் நட்புறவுக் கட்சியாக தொடர்ந்து இருக்கும். ஆனால் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் உட்பட வேறு  எந்தப் பதவியையும் மஇகா ஏற்றுக் கொள்ளாது,” என்றார்.

 அம்னோவும் சாடியது

இதனிடையே, பேராக் பிஎன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் சங்கத் தலைவர் முகம்மட் கூசய்ரி அப்துல் தாலிப், சட்டமன்றத் தலைவர் பதவி தொடர்பில் ப்ழனிவேல் மிரட்டியிருப்பதைச் சாடினார்.

“பழனிவேலின் அறிக்கை (பேராக் மந்திரி புசார்) டாக்டர் ஸம்ரி அப்துல் காடிரை மிரட்டுவதுபோல் இருக்கிறது.

“ஒரு கட்சிக்கு (மஇகா) தலைமையேற்க தகுதியற்றவர் என்பதை அவர் காண்பித்துக் கொண்டிருக்கிறார்”, என அம்னோ சிலிம் சட்டமன்ற உறுப்பினரான கூசய்ரி கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.

 

 

 

TAGS: