பக்காத்தான் இன்று தொடக்கம் 35 தேர்தல் மனுக்களைச் சமர்பிக்கும்

petitionமே 5 பொதுத் தேர்தலில் முறைகேடுகளும் குற்றச்செயல்களும் நிகழ்ந்துள்ளதாக  கூறப்படுவதற்கு எதிராக எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட்  இன்று தொடக்கம் 35 தேர்தல் மனுக்களை சமர்பிக்கும்.

அந்த மனுக்களைச் சமர்பிப்பதற்கான இறுதி நாள் வரும் வியாழக் கிழமை ஆகும்.

“அதற்கு தொடக்கத்தில் 500,000 ரிங்கிட் செலவு பிடிக்கும். நாங்கள் மேலும் ஒரு  மில்லியன் ரிங்கிட் திரட்ட வேண்டியிருக்கும்,” என பிகேஆர் வியூக இயக்குநர்  ராபிஸி இஸ்மாயில் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

ஒவ்வொரு தேர்தல் மனுவுக்கும் தொடக்கத்தில் 15,000 ரிங்கிட் வைப்புத் தொகை  செலுத்த வேண்டும் என்றும் அதற்கு பின்னர் ஒவ்வொரு மனுவுக்கும் 30,000  ரிங்கிட் செலவாகும் என்றும் ராபிஸி விளக்கினார். நீதிமன்றப் போராட்டத்தில் மனு  நிராகரிக்கப்பட்டால் அந்தத் தொகையை பிரதிவாதிக்குக் கொடுக்க  வேண்டியிருக்கும் என அவர் சொன்னார்.

பக்காத்தானுக்கு ஏற்படும் சட்டச் செலவுகளில் பெரும்பகுதி pro-bonoவாக  இருக்கும் என்றும் அதனால் கூட்டணிக்கு ஒரளவு பணம் மிச்சமாகும் என்றும்  ராபிஸி தெரிவித்தார்.

பக்காத்தான் தாக்கல் செய்யும் தேர்தல் மனுக்களில் 25 நாடாளுமன்ற இடங்கள்  சம்பந்தப்பட்டதாகும். 10 சட்டமன்றத் தொகுதிகள் பற்றியதாகும்.