தமிழின எழுச்சிக்காக ஓங்கி குரல் கொடுத்து வந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் தமிழ் மக்களின் மனங்களில் தனி முத்திரை பதித்த நடிகரும், தமிழின உணர்வாளருமாகிய மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தை மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளைஞர்களும், மியன்மார் தமிழர்களும் ஒன்றினைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
அக வணக்கத்துடன் ஆரம்பமான இன் நிகழ்வில் பல உணர்வாளர்கள் கூடி, அமரர் மணிவண்ணன் அவர்களின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி தமது அஞ்சலியை செலுத்தினர்.
நேரம் மற்றும் இடவசதியின்மையினால் குறிப்பிட்ட ஓர் சிறிய இடத்தில் அஞ்சலி கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இக்கூட்டத்தில் ஐயா மணிவண்ணன் அவர்களின் உரைகளும், அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசால் பிரகடணப்படுத்தப்பட்ட தமிழீழ சாசனம் குறித்த காணொளிப் பதிவுகளும் வந்திருந்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஈழத்தமிழர் ஒன்றியம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியவை தமது ஆதரவை வழங்கியிருந்தது.
“மணிவண்ணன் ஐயா அவர்களது தமிழினம் மீதான பற்றுதல் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மேலும் ஓங்கி வெளிப்பட்டு நின்றது.
குறிப்பாக தமிழகத்தில் பெருமளவான மக்கள் கூட்டத்தில் மேடைகளில் உரையாற்றும் வேளைகளில் தமிழர்களுக்கு ஒரு நாடு உதயமாக வேண்டும் என்பதையும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்பதையும், அதனை ஒவ்வொரு தமிழனும் துணிந்தெழுந்து அநீதிகளுக்கு எதிராக போராடுவதன் மூலமே அடைய முடியும் என்பதையும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி வந்திருந்தார்.”
“எங்கள் மனங்களில் மணிவண்ணன் ஐயா அவர்கள் என்றுமே உயர்ந்து நிற்கின்றார். இவரின் திடீர் மறைவு விடுதலையின்பால் தாகம் கொண்ட மக்களுக்கு என்றுமே பேரிழப்பாகும். நடிப்பால் தமிழ் மக்களின் மனதில் நிறைந்து, தமிழனாக வாழ்ந்து, இன உணர்வால் தன்மானத் தமிழனாய் நிமிர்ந்த ஐயா அவர்களை காலன் எம்மிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.”
“தமிழீழம் நோக்கிய எமது பாதையில் முன்னோக்கி தடம் பதித்து விரைந்து வென்றெடுப்போம் என்று இவரின் இழப்பை சுமந்த இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்கிறோம். அதுவே இவருக்கு நாம் செய்யும் உண்மையான இறுதி வீரவணக்கமாகும்” என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
[செய்தி / படம் : பிரசன்னா, செம்ருத்தி.காம்]
மணிவண்ணன் அவர்களின் நேர்காணலை செம்பருத்தி வெளியிட்டு இருந்தது. அவர்களும் அஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கலாம்?