மெனாரா அம்னோ கட்டிடம் மீதான ஆய்வறிக்கையை தான் சமர்பிக்கத் தவறியிருந்தால் கவனக் குறைவுக்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதை எதிர்நோக்க தயார் என அதன் உரிமையாளர் நிறுவனம் சொல்கிறது.
பினாங்கு தீவு நகராட்சி மன்றத்துக்கு 2008ம் ஆண்டு ஆய்வறிக்கையைச் சமர்பிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது உள் விசாரணையை JKP Sdn Bhd என்ற அந்த நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி அட்ஸ்மி அரிபின் தெரிவித்தார்.
“நாங்கள் தவறு செய்துள்ளதாக அந்த நகராட்சி மன்றம் கண்டு பிடித்தால் சட்டத்தை மதித்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதை எதிர்நோக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்றார் அவர்.
2005ம் ஆண்டு அந்த கட்டிடத்தை தமது நிறுவனம் வாங்கியது என்றும் அந்தக் கட்டிடத்தின் 10வது ஆண்டில் ஊராட்சி மன்றத்துக்கு ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்பதை அது உணரவில்லை என்றும் அட்ஸ்மி சொன்னார்.