ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர் என்கிறார் பூச்சோங் எம்பி

கார் திருடன் என சந்தேகிக்கப்பட்ட ஏ குகன் மரணத்திற்கான காரணம்  மறைக்கப்பட்டதில் ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு  பாக்காரை உயர் நீதிமன்றம் சம்பந்தப்படுத்தியிருப்பதால் அவருடைய  தோற்றத்துக்குப் பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளதாக பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்  டியோ கூறுகிறார்.

khalid‘குகன் வழக்கு இன்னும் தேங்கியிருப்பதால் ஐஜிபி-யின் நடத்தை மிகவும்  கேள்விக்குரியது என்பது பிரதமரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க  வேண்டும். இருந்தும் காலித்தை ஐஜிபி-யாக நியமிப்பது பொருத்தமானது எனப்  பிரதமர் கருதியிருக்கிறார்.

“இப்போது பிரதமருக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அதற்கு பிரதமர் தம்மையே குறை கூறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த  வழக்கில் நீதிமன்றம் காலித்துக்கு எதிராக முடிவு செய்யக் கூடும் என்ற  உண்மையை அவர் உணராமல் போய் விட்டார்,” என கோபிந்த் நேற்று விடுத்த  அறிக்கையில் கூறினார்.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் குகன் மரணமடைந்ததற்கான காரணத்தை  மறைக்கும் முயற்சியில் காலித் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று கோலாலம்பூர் உயர்  நீதிமன்றம் கூறியது.