டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனையின் வீடியோ ஒளிப்பதிவின் சுருக்கம் இணையத்தில் கசிந்துள்ளது.
ஸ்குருகுவாட் என அழைக்கப்படும் வலைப்பதிவாளர் நேற்று 1.25 நிமிட வீடியோ ஒளிப்பதிவை நேற்று இணையத்தில் சேர்த்துள்ளார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அந்தத் தேவாலய வளாகத்தில் நன்றி தெரிவிக்கும் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்துக்குள் ஜயிஸ் அதிகாரிகள் செல்வதை அந்த ஒளிப்பதிவு காட்டுகிறது.
முன்னறிவிப்பு கொடுக்கப்படாத அந்த வருகை சோதனை எனச் சொல்லப்படுவதை ஜயிஸ் மறுத்துள்ளது. டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் நடத்தும் “நோன்பு துறக்கும் நிகழ்விலும்” நன்றி தெரிவிக்கும் நிகழ்விலும் முஸ்லிம்களும் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதனை ‘சோதிப்பதற்காக’ அங்கு சென்றதாக அது கூறியது.
1995ம் ஆண்டுக்கான சிலாங்கூர் ஷரியா கிரிமினல் சட்டத்தின் கீழ் அந்த ‘சோதனை’ மேற்கொள்ளப்பட்டது.
‘Jalan-jalan buka puasa, Thanksgiving Dinner Hall 3, Damansara Utama Methodist Church 3 Ogos 2011’, என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒளிப்பதிவில் ஜயிஸ், போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று தேவாலயக் கட்டிடத்திற்குள்ளும் விருந்து மண்டபத்துக்குள்ளும் நுழைவதை காட்டுகிறது.
“ஜயிஸ் கூறப்பட்டது போல சோதனையை நடத்தவில்லை. அதே வேளையில் செய்தி இணையத் தளங்கள் குறிப்பாக மலேசியாகினியும் மலேசியன் இன்சைடரும் தங்களது தீய பணிகளை மறைப்பதற்காக பொய் உரைத்ததுடன் ஜயிஸுக்கும் களங்கத்தை ஏற்படுத்தின,” என அந்த வீடியோவில் காணப்படும் செய்தி குறிப்பிட்டது.
அந்த வீடியோ நீண்ட நேரம் ஒடும் ஒளிப்பதிவின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வில் மதம் மாற்றம் நிகழ்வதாக தான் கூறிக் கொள்வதை நிரூபிப்பதற்கு ஆதாரத்தை வைத்துள்ளது என்பதை உறுதி செய்வதற்காக முழு வீடியோவும் பின்னொரு தேதியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களை ஜயிஸ் விசாரித்தது. “தமது சமயத்தை மாற்றிக் கொள்ளுமாறு முஸ்லிம் ஒருவரை வற்புறுத்துவது, தூண்டுவது அல்லது செல்வாக்கைப் பயன்படுத்துவது ஆகிய குற்றத்திற்காக 1988ம் ஆண்டுக்கான இஸ்லாம் அல்லாத சமயங்கள் ( முஸ்லிம்களிடையே பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது) சட்டத்தின் கீழ் அந்த நிகழ்வு விசாரிக்கப்படுகிறது.
ஹராப்பான் கம்யூனிட்டி என்னும் அரசு சாரா அமைப்பு ஏற்பாடு செய்த அந்த நிதி திரட்டும் விருந்தின் போது ஜயிஸ் அதிகாரிகள் அந்த 12 பேரின் விவரங்களையும் பதிவு செய்தார்கள்.