பினாங்கு சட்டமன்றத்துக்கு வெளியில் உத்துசான் நிருபர் ஆட்சேபம்

utusanஅம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவைச் சேர்ந்த நிருபர் ஒருவர்,  பினாங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவி உறுதி மொழி  எடுத்துக் கொள்ளும் சடங்கில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்பட்டதை  ஆட்சேபித்து சட்டமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் தனி ஒருவராகப் போராட்டம்  நடத்தினார்.

அந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த அவர்,  ‘Ketulasan mati di sini’ ( இங்கு வெளிப்படை செத்து விட்டது) எனக் கூறும்  வாசகத்தைக் கொண்ட அட்டையை ஏந்தியிருந்தார்.

ஆனால் உத்துசான் மலேசியா நிருபர்களைத் தடுக்குமாறு தாம் எந்த
ஆணையையும் பிறப்பிக்கவில்லை என சட்டமன்ற சபாநாயகரும் புக்கிட் தம்பூன்  சட்டமன்ற உறுப்பினருமான லாவ் சூ கியாங் கூறினார்.

முந்திய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதியை சட்டமன்ற பாதுகாவலர்கள்  பின்பற்றியிருக்கலாம் என அவர் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“அது தவறான புரிந்துணர்வு. அவர் தடுக்கப்பட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம்.  மீண்டும் அது நடக்காது என நான் உறுதி கூறுகிறேன்.”

மாநில சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்கு 2011ல்  உத்துசான் நிருபர்களுக்கு சட்டமன்றம் தடை விதித்தது.