ஆயர்: துணைப் பிரதமர் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்

DPMகுழந்தைகளை மதம் மாற்றுவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய  சட்டத் திருத்தம் மீது துணைப் பிரதமர் முஹைடின் யாசின் விடுத்துள்ள  அண்மைய அறிக்கை ‘ஒரே சமயத்தில் அச்சத்தையும் தருகிறது, எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ளது’ என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங்  கருதுகிறார்.

“அரசாங்கம் எல்லாக் கருத்துக்ளையும்  கவனத்தில் கொள்வதாகக்  கூறும் முஹைடின்  குழந்தைகள் மதம் மாற்றம் தொடர்பாக கூட்டரசு நீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்ப்புக்கு இணங்க அந்த திருத்த மசோதா இருப்பதாகச் சொல்கிறார்,” என அவர்  சொன்னார்.dpm1

அவர் மலாக்கா, ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் ஆவார்.

அத்துடன் 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்)  சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றி அமைச்சரவையில்  விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் முஹைடின் சொல்வது வினோதமாக உள்ளது  என்றும் ஆயர் பால் தான் குறிப்பிட்டார்.

ஏனெனில் அந்தத் திருத்தங்களுக்கு பிஎன் உறுப்புக் கட்சிகளும் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளன என்றார் அவர்.

“துணைப் பிரதமர் சொல்வது போல அனைத்துக் கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க மாட்டாது. காரணம் பல தரப்புக்கள் அதனை ஆட்சேபிக்கின்றன,” என்று ஆயர் பால் தான் சொன்னார்.