பாஸ்: வாக்குகளுக்காக குடியுரிமை என்று கூறப்படுவதற்கு அமைச்சு விளக்கமளிக்க வேண்டும்

வாக்குகளுக்கு பரிவர்த்தனையாக அந்நியர்களுக்குக் குடியுரிமையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அடங்கிய குழு பற்றி உள்துறை அமைச்சிடமிருந்து விரைவான விளக்கத்தை பாஸ் கோரியுள்ளது

அத்தகைய நடவடிக்கைகளுக்கு கட்சியிடம் “வலுவான ஆதாரம்” இருப்பதாக அதன் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் வலியுறுத்தினார். மிக அண்மையில் புத்ராஜெயாவில் அது போன்ற நடவடிக்கை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“அடுத்தடுத்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அந்த விவகாரம் மீது உள்துறை அமைச்சிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை”, என சலாஹுடின் கூறினார்.

“அதனால் பக்காத்தான் எம்பி-க்கள் அந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமைச்சிடமிருந்து விளக்கம் கோருவர்.”

ஏற்கனவே நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றுள்ள அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நேற்று பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுப் பொருளாளர் முகமட் அட்ராம் மூசா கூறியுள்ளார்.

ஜோகூர் கூலாயிலிருந்து புத்ராஜெயாவுக்கு ஆறு பஸ்களில் 240 அந்நியர்கள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாங்கியில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றுக்கு வெளியில் பாஸ் உறுப்பினர்கள் காத்திருந்தனர்.

அந்த அந்நியர்கள் ஏற்கனவே நிரந்தரவாசிகளாக இருந்தாலும் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சலாஹுடின் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“தேர்ச்சி பெற்ற அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்குவதே சீரான நடமுறையாகும். அதுவும்  மொத்தமாக அல்ல. அத்தகைய நடவடிக்கைகள் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு உதவியாக அந்நியர்களை குடிமக்களாகப் பதிவு செய்யும் முயற்சிகளில் சில கும்பல்கள் ஈடுபட்டுள்ளனவா என்னும் கவலையை உருவாக்கியுள்ளன.”

அந்த நடவடிக்கையின் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டார்

அந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அந்த நடவடிக்கையின் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் கண்டுள்ளதாக  நிருபர்கள் சந்திப்பில் உடன் இருந்த முகமட் அட்ராம் கூறினார்.

“தொழில் முனைவர் பயிற்சிக்காக தாங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாக அந்த அந்நியர்கள் தெரிவித்தனர். ஆனால் சில இந்தோனிசியர்களை வினவிய போது மை கார்டுகளை பெறுவதற்காக வந்ததாகக் கூறினர்”, என அவர் சொன்னார்.

ஆனால் அந்த இடத்தில் குடி நுழைவுத் துறை அதிகாரிகளையோ தேசியப் பதிவுத் துறை அதிகாரிகளையோ தாங்கள் பார்க்கவில்லை என முகமட் அட்ராம் தெரிவித்தார்.

இந்தோனிசியர்களுடன் கம்போடியா, வங்காள தேசம் ஆகியவற்றைச் சேர்ந்த அந்நியர்களும் அங்கு காணப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த நடவடிக்கையின் தலைவர் என நம்பப்படும் தனி நபருடைய படங்களும் அந்நியர்களைக் கொண்டு வந்த பஸ்களின் படங்களும் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்கு விநியோகம்  செய்யப்பட்டன.