மதம் மாற்ற மசோதா மீது தெளிவு இல்லை எனச் சாடுகிறார் அன்வார்

2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சமய நிர்வாக (கூட்டரசு பிரதேசம்) மசோதா விவகாரத்தில் அமைச்சரவையில்  தெளிவு இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.

அந்த மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யும் முன்னர்  அமைச்சரவை அதனை விவாதித்திருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

mosque“அந்த மசோதாவின் தற்போதைய நிலை குறித்து இது வரை நமக்கு எதுவும்  தெரியாது. அந்த மசோதா மீது பிஎன் -னுக்குள் தகராறு நிலவுவது தெரிகிறது,”  என்றார் அவர்.

குழந்தைகள் தன்மூப்பாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படுவதை  அனுமதிக்கும் அந்த மசோதாவை இது வரை மஇகா, மசீச, கெராக்கான் ஆகிய  பிஎன் உறுப்புக் கட்சிகள் எதிர்த்துள்ளன.

“அந்த மசோதா அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்படவில்லை அல்லது  பிஎன் -னில் புரிந்துணர்வு இல்லை என்பதை அது உணர்த்துகின்றது.”

சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் பிரதமர் துறை அமைச்சர் பால்  லாவ் ஆகியோரும் கூட அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.