குழந்தைகள் மத மாற்றம்: மலேசிய இந்து தர்ம மாமன்றம் எதிர்க்கிறது

news05713aகடந்த ஜூன் மாதம் 26 இல் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இஸ்லாமியச் சட்ட நிருவாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த மசோதாவிற்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

“இச்சட்டத்தால் இந்நாட்டிலுள்ள இந்துக்கள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகும்”, என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசிய பொதுச் செயலாளர் ரிஷிக்குமார் வடிவேல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்புதிய இஸ்லாமிய சட்ட நிருவாக திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள 107 (பி) பிரிவு “ஒரு  பிள்ளை 18 வயதை அடையாத நிலையில் அப்பிள்ளை அம்மா அல்லது அப்பா அல்லது காப்பாளர் ஒப்புதலுடன்  இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய வழிவகுக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“பெற்றோர்” என்ற இருவரையும் குறிக்கும் சொல்லுக்குப் பதிலாக “அம்மா” அல்லது “அப்பா” என்ற சொல்லை சேர்ப்பதன் வழி அவ்விருவரில் ஒருவர் அனுமதியளித்தால் 18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளை இஸ்லாமிய மதத்தற்கு மாற்றலாம் எனத் திருத்தம் செய்வதன் மூலம் தேசிய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றும் நோக்கத்தை இந்தச் சட்டத் திருத்த மசோதா கொண்டுள்ளதை உணர முடிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“தாய் அல்லது தந்தை மட்டுமே 18 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வதை அனுமதிக்க இயலாது என 2009 ஆம் ஆண்டில் அமைச்சரவை எடுத்திருந்த முடிவை இங்கு நினைவு கூற வேண்டும்”, என்றாரவர்

 

இந்துக்களுக்கு ஒரு சவால்

“நடைபெற்றுக்குக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்”, என இந்து தர்ம மாமன்றம் எதிர்பார்ப்பதாக  அவர் கூறுகிறார்.

“தங்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பான கருத்துகளை எழுப்புமாறு மலேசிய இந்து தர்ம மாமன்றம் இந்துக்களை கேட்டுகொள்கிறது.”

நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள “இந்த இஸ்லாமிய நிருவாகச் சட்டத் திருத்தம் மலேசிய இந்துக்களுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது” என்பதைச் சுட்டிக் காட்டி “இந்துக்களுக்கு வலிமையான சமய விழிப்புணர்வும், சமயத்தின்பால் பற்றும், பெருமிதமும், நன்மதிப்பும் தேவை என்பதை இதுபோன்ற சூழல்கள் உணர்த்துகின்றன”, என்றாரவர்.

“இந்துக்களுக்கு இந்து சமயம் முறையாக கற்பிக்கப்படுமானால் இத்தகையச் சிக்கல்கள் நம்மை அணுகாது என்பதையும் இந்து தர்ம மாமன்றம் வலியுறுத்துகிறது. வருமுன் காப்பதே சிறப்பாகும்” என்றும் அவர் கூறினார்.

“அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படுவதற்கும், அதில் அடங்கியுள்ள சமயச் சுதந்திரம் நிலைநிறுத்தப்படுவதற்கும் இந்துக்கள் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

“மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதன் அனைத்து அருள் நிலையங்களும் அவை அமைந்துள்ள இடங்களில் வாழும் இந்துக்களுக்கு மத மாற்றம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”, என்று கேட்டுக்கொள்வதாக ரிஷிக்குமார் கூறினார்.

“சமய வழிபாட்டுச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் பொதுவானது என்பதால் இன்றைய அரசு இதற்கு மதிப்பளிக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வோம்!” என்றாரவர்.

TAGS: