தாயிப் மீது வழக்குப் போட ஏன் நீண்ட காலம் பிடிக்கிறது ?

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டின் உறவினர்கள்  சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நில ஊழல் விவகாரம் மீது விசாரணை  நடத்துவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஏன் நீண்ட காலம்  எடுத்துக் கொள்கிறது என ஒர் அனைத்துலக அரசு சாரா அமைப்பு  வினவியுள்ளது.

2011ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்ட எம்ஏசிசி விசாரணை, கணிசமான  ஆதாரங்கள் இருந்த போதிலும் இன்னும்  முடிவடையவில்லை என Global Witness  என அழைக்கப்படும் ஒர் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு அமைப்பு கூறியது.

அத்துடன் அந்த விவகாரத்தை அம்பலப்படுத்தும் காணொளி
வெளியிடப்பட்டுள்ளதையும் அது சுட்டிக்காடியது.

“அந்த விசாரணை தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால்  இன்னும் அர்த்தமுள்ள முடிவு காணப்படவில்லை.”

தாயிப் தங்களுக்குக் கொடுத்த வெட்டுமர அனுமதிகளையும் நில அனுமதிகளையும்  தாங்கள் தவறாக பயன்படுத்தும் வழிகளை தாயிப்பின் இரண்டு உறவினர்களும்  இதர வர்த்தக பங்காளிகளும் விளக்குவதை அந்தக் காணொளி காட்டுவதாக  கூறப்பட்டது.