எம்ஏசிசி, இளைஞர் அமைச்சு செலவுகளைக் கண்காணிக்கும்

khairyஇளைஞர் விளையாட்டு அமைச்சின் செலவுகளை மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) நேரடியாகக் கண்காணிப்பதற்கு உதவியாக அந்த அமைச்சு  எம்ஏசிசி-உடன் புரிந்துணர்வுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அமைச்சின் செலவுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கம்  கொண்ட கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் செங்  குவான் தலைமை தாங்குவார் என அமைச்சர் கைரி ஜமாலுதின் சொன்னார்.

அமைச்சு மில்லியன் கணக்கான ரிங்கிட் பெறும் தேசிய இளைஞர் தொழில் திறன்  பயிற்சிக் கழகம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதால் அது  தனது நிதி நிர்வாகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது என்றும் கைரி  சொன்னார்.

“பண விரயமோ கசிவுகளோ இல்லாமல் இருப்பதை எம்ஏசிசி உறுதி செய்யும்,”  என்றார் அவர்.

தமது அமைச்சின் ஊழியர்களுக்கு சிறந்த சேவை விருதுகளை இன்று வழங்கிய  பின்னர் கைரி நிருபர்களிடம் பேசினார்.