கடந்த ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்கு பதில் முன்மொழியப்படும் மாற்றுச் சட்டம் மக்களுடைய அடிப்படை சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் சொல்கிறார்.
“வரையப்படும் எந்தச் சட்டமும் நீதித் துறையை நாடுவதற்கான உரிமை, முறையீடு செய்து கொள்வதற்கான உரிமை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும்,” என அவர் கூறினார்.
அவர் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
கால வரம்பின்றி தடுத்து வைப்பதற்கு வகை செய்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதில் அறிமுகம் செய்யப்பட்ட பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தில் அனைத்துலக நீதித் துறை பண்புகள் அனைத்தும் இடம் பெற்றதை வான் ஜுனாய்டி சுட்டிக் காட்டினார்.