‘பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் IPCMC போன்ற அமைப்புக்கள் உள்ளன’

Kamiliaபிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் IPCMC போன்ற கண்காணிப்பு  அமைப்புக்கள் இயங்கும் போது இங்கு IPCMC என்ற போலீஸ் புகார்கள்,  தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பது எப்படி  அரசமைப்புக்கு முரணானதாகும் என்று முன்னாள் அம்னோ மகளிர் பிரிவுத்  துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு அந்த IPCMC யோசனையைச் சமர்பித்த அரச விசாரணை
ஆணையத்தின் (ஆர்சிஐ) 15 உறுப்பினர்களில் கமிலியாவும் ஒருவர் ஆவார்.

பிரிட்டனில் போலீஸ் புகார்கள் மீதான சுயேச்சை ஆணையம், ஆஸ்திரேலியா நியூ  சவுத் வேல்ஸில் ombudsman என அழைக்கப்படும் விசாரணை அதிகாரி போலீஸ்  படையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கிலும் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்திலும் அது போன்ற  அமைப்புக்கள் இயங்குவதாகவும் கமிலியா சொன்னார். அவர் வழக்குரைஞரும்  ஆவார்.

“ஆணையம் அந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அவற்றின் அமலாக்கத்தை  ஆய்வு செய்த பின்னர் அறிக்கை வழங்கி பரிந்துரை செய்திருக்கும்  போது அரசமைப்புக்கு முரணானது என எப்படிச் சொல்ல முடியும் ?” என்றும்  அவர் வினவினார்.

“மற்ற நாடுகள் அதனைச் செய்திருக்கும் போது இங்கு ஏன் அதனை அமலாக்க  முடியாது ?”

“லாக்கப் மரணங்கள், அதிகார அத்துமீறல், ஊழல் போன்ற விஷயங்களை  போலீசார் தங்களையே விசாரித்துக் கொள்ளும் நிலை இருக்கக் கூடாது,” என்றும்  கமிலியா சொன்னார்.