மலேசியாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதை ஒர் அனைத்துலக ஆய்வு காட்டியுள்ளதைத் தொடர்ந்து ஊழலைத் துடைத்தொழிக்க ‘தீவிரமான சீர்திருத்தங்களை’ அமலாக்க பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு திட்டமிட்டுள்ளது குறித்து பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலைத் தடுப்பதற்கு தான் போதுமான அளவுக்குச் செய்யவில்லை என்பதை பெமாண்டு ஒப்புக் கொண்டுள்ளதை வரவேற்ற டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவுச் செயலாளருமான புவா, அண்மைய அரசாங்க முயற்சிகள் ‘கடுமையானவை அல்ல’ என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஊழலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் மீது மக்கள்
வைத்திருந்த நம்பிக்கை 2011ல் 49 விழுக்காடாக இருந்தது 2012ல் 31
விழுக்காடாக சரிந்து விட்டதை அண்மையில் அனைத்துலக வெளிப்படைக் கழகம் வெளியிட்ட உலக ஊழல் அளவுகோல் காட்டியது.
ஊழலை ஒடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் (NKRA) ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநர் ரவிந்திரன் தேவகுணம் உறுதி கூறியுள்ளது, ‘ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை’ என்றும் புவா சொன்னார்.