டிஏபி: ‘முன்னாள் கைதிகள் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை ?’

news12713bரத்துச் செய்யப்பட்டு விட்ட அவசர காலச் சட்டத்தின் (EO) கீழ்  வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால்  அவர்கள் ஏன் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை  உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் என டிஏபி  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அவசர காலச் சட்டத்துக்கு புத்துயிரூட்ட வேண்டியதின் அவசியத்தை  அல்லது அது போன்ற புதிய சட்டத்தை வரைய வேண்டியதின் அவசியத்தை  நியாயப்படுத்தும் அண்மைய ஆய்வின் முடிவுகளை வரும் செப்டம்பர் மாதம்  நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது தெரிவிப்பதாக ஸாஹிட் கூறியுள்ளது பற்றி
புவா கருத்துரைத்தார்.

சிலாங்கூரில் நிகழும் குற்றச் செயல்களில் 90 விழுக்காடு முன்னாள் அவசர காலச்  சட்ட கைதிகளினால் திட்டமிடப்பட்டவை என்பது அந்த ஆய்வின் வழி தெரிய  வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறிக் கொண்டுள்ளார்.

“உண்மையில் அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது EO  சட்டத்துக்கான தேவையை நிரூபிக்கவில்லை. போலீஸ் படை முற்றிலும்  திறமையற்றது என்பதையே அது காட்டுகின்றது,” என புவா ஒர் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

“குற்றச் செயல்களில் 90 விழுக்காட்டைச் செய்தவர்கள் யார் என்பது உறுதியாகத்  தெரிந்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி ஜெயிலில் போடவில்லை,”  என்றும் அவர் வினவினார்.

TAGS: