‘மலேசியாவிலிருந்து வத்திகன் பேராளரைத் துரத்துங்கள்’ என அரசாங்கத்துக்கு வேண்டுகோள்

news12713e‘இந்த நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களில்’ தலையிட்டதற்காக மலேசியாவுக்கான  வத்திகன் தூதரை ‘துரத்துமாறு’ மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களின்  கூட்டணி ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

‘அல்லாஹ்’ என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்கு பேராயர்  ஜோசப் மரினோ அங்கீகாரம் அளித்துள்ளது, தூதருக்கு ‘கெட்ட நோக்கம்’  உள்ளதை நிரூபிப்பதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கத்தையும்  உறுப்பினராகக் கொண்ட அந்தக் கூட்டணி தெரிவித்தது.

இறைவனைக் குறிப்பதற்கு ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள்  பயன்படுத்துவதற்கான உரிமைக்குப் போராடும் உள்நாட்டு கத்தோலிக்க  தேவாலயம் ஒன்றை பேராயர் மரினோ பாராட்டியுள்ளதாக நேற்று செய்திகள்  வெளியாயின.

மலேசியாவில் வத்திகன் தூதரின் அறிக்கை, போக்கு குறித்து போப்பாண்டவர்  பிரான்ஸுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் அந்தக் கூட்டணியின் செயலகப்  பிரச்சாரப் பிரிவுத் தலைவர் சுல்கர்னாயின் தாயிப் இன்று விடுத்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.