பிகேஆர்: குகன் வழக்கில் அரசாங்க முறையீடு ‘மனிதநேயமற்றது’

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகனின் தாயார்  போலீசாருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு அரசாங்கம் முறையீடு செய்து  கொண்டுள்ளது ‘மனிதநேயமற்றது’ என பிகேஆர் வருணித்துள்ளது.

தமது புதல்வருக்கு நீதி கேட்டு வாதியான என் இந்திரா நான்கு ஆண்டுகளுக்கு  துயரங்களை அனுபவித்து விட்டதால் அரசாங்கம் முறையீடு செய்யக் கூடாது என  பிகேஆர் தொடர்பு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் ஒர் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

“தனது கொள்கைகள் குறைகூறப்படுவதை ஏற்றுக் கொள்ள கூட்டரசு அரசாங்கம்  தவறி விட்டதையும் அந்த முறையீடு உணர்த்துகின்றது,” என்றும் அவர் சொன்னார்.

நஜிப் நிர்வாகம் மேலும் பணத்தையும் வளங்களையும் விரயமாக்கக் கூடாது  என்றும் அந்தக் குடும்பத்தின் துயரம் தொடருவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும்  நிக் நஸ்மி கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பதில் அது IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான  சுயேச்சை ஆணையத்தை உருவாக்கி போலீஸ் படையை சீரமைப்புச் செய்ய  வேண்டும் என்றார் அவர்.

 

TAGS: