பினாங்கு மாநில அரசின் ஊழியர்களுக்கு “ராயா காசாக” குறைந்தபட்சம் ரிம600 வழங்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார்.
பினாங்கில் அரசுத்துறைகளிலும் ஊராட்சி மன்றங்களிலும் அரசுசார்ந்த நிறுவனங்களிலும் சுமார் 7,800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
திருக்குர் ஆன் போதகர்களுக்கும் குறைந்தபட்சம் ரிம 300 வழங்கப்படும் என்று லிம் கூறினார்.
ஹரி ராயா போனசுக்காக மாநில அரசு ரிம3 மில்லியனைச் செலவிடும் என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.
இரண்டு நாள்களுக்குமுன் கூட்டரசு அரசாங்கம், அரசுஊழியர்கள் ‘ராயா காசாக’ ரிம500 பெறுவார்கள் என்று அறிவித்திருந்தது.
“நாங்கள் ரிம100 கூடுதலாகக் கொடுக்கிறோம்”, என்று லிம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாநில அரசு அதன் ஊழியர்களின் சேவையை மதித்து இந்த போனசை அளிப்பதாக அவர் கூறினார்.
“இந்த போனஸ் அவர்கள் ஹரி ராயாவைக் கொண்டாட உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்”, என்றாரவர்.
“தற்போதைய பொருளாதார நிலையில் அவர்களின் சுமையைக் குறைக்க ஓரளவுக்குக் குறைக்க முடிவதை எண்ணி மாநில அரசு மகிழ்ச்சி அடைகிறது.”
பினாங்கு மாநிலத்தின் இந்த போனஸ், ஆகஸ்ட் 19-இல் வழங்கப்படும்.