பள்ளிக்கூடங்களுக்கான இணையக் கல்வி வசதிகள் மீது ஒய்டிஎல் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்கப்பட்டது ஏன் என்று டிஏபி எம்பி ஜைரில் கிர் ஜொஹாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைத் தரக் கூடியது என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மட்டுமே இணையச் சேவைகளை வழங்கி வரும் ஒய்டிஎல் இந்த நாட்டில் 5.5 மில்லியன் மாணவர்களைக் கொண்ட 10,000 பள்ளிக்கூடங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எப்படிச் சிறந்த தேர்வாகியது என அறியவும் அந்த புக்கிட் பெண்டேரா எம்பி விரும்புகிறார்.
தாம் அந்த விஷயத்தை மக்களவையில் எழுப்பியுள்ளதாகவும் அவர் சொன்னார். “அந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு செலவுகள் அடிப்படையில் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை எதிர்நோக்க நான் தயாராக இருந்தாலும் எல்லா நடவடிக்கைகளும் ஒரே நிறுவனத்துக்கு-ஒய்டிஎல் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள நான் ஆயத்தமாக இல்லை,” என ஜைரில் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.