சாப்ரி உரிமைகள் குழுவுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது

shabery cheekஅரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான ஆர்டிஎம் ‘பாரபட்சம் காட்டுவதில்லை’ எனக்  கூறியதற்காக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாப்ரி சிக் நாடாளுமன்றத்தின்  உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற  தீர்மானத்தை பாடாங் செராய் எம்பி என் சுரேந்திரன் சமர்பித்துள்ளார்.

ஆர்டிஎம் மீது மக்களவையில் சாப்ரி வாய்மொழியாக அளித்த பதில் தவறாக வழி  நடத்துகிறது என நாடாளுமன்ற வளாகத்தில் சுரேந்திரன் நிருபர்களிடம் கூறினார்.

“ஆர்டிஎம் வெளியிடும் தகவல்கள், செய்திகளின் மதிப்பு அடிப்படையைச்  சார்ந்துள்ளது என்றும் பாரபட்சமானது அல்ல என்றும் ஜுலை 9ம் தேதி அமைச்சர்  வாய்மொழியாக பதில் அளித்திருந்தார்.”

“அது உண்மையில்லை என்பது எந்த ஊடகத்துக்கும் தெரியும். ஆர்டிஎம்
பிஎன்-னுக்கும் அரசாங்கத்துக்கும் சார்பானது என்பது நமக்குத் தெரியும். ஆகவே  அமைச்சர் விடுத்த அறிக்கை அல்லது பதில் தவறானது,” என சுரேந்திரன்  சொன்னார்.

நிரந்தர ஆணை 36(12)ன் கீழ் அமைச்சர்கள் அல்லது எம்பி-க்கள் அவையை  குழப்பக் கூடாது எனக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.