தாஜுடின் வெளியிட்ட ‘அதிபர்’ கருத்து தொடர்பில் கர்பால் போலீசில் புகார்

Datuk Tajuddin Abdul Rahmanதேச நிந்தனைக் கருத்து எனக் கூறப்படுவது தொடர்பில் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் துணை  அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக டிஏபி தேசியத் தலைவர்  கர்பால் சிங், இன்று இன்று போலீசில் புகார்  செய்தார்.

டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் -உடன் சென்ற கர்பால், கோலாலம்பூர் துன்  எச் எஸ் லீ போலீஸ் நிலையத்தில் நண்பகல் வாக்கில் அந்தப் புகாரை  சமர்பித்தார்.

பாஸ் வழியாக புத்ராஜெயாவை டிஏபி கட்டுப்படுத்த கோலா பெசுட் வாக்காளர்கள்  அனுமதித்தால் தாம் (கர்பால் சிங்) மலேசியாவின் முதலாவது அதிபராக இருக்கக்  கூடும் என திரங்கானு கோலா பெசுட்டில் தாஜுடின் சொன்னதாக கூறப்படுவது  மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தாஜுடினைப் போலீசார் விசாரிக்க வேண்டும்  என கர்பால் கேட்டுக் கொண்டார்.

கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதிக்கான பிஎன் பேராளர் டாக்டர் ஏ ரஹ்மான்  மொக்தார் ஜுன் 26ல் காலமானதைத் தொடர்ந்து அங்கு ஜுலை 24ம் நாள் இடைத்  தேர்தல் நடைபெறவிருக்கிறது.

பிஎன் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பாஸ் கட்சியுடன் நேரடியாக  மோதுகின்றது.

தாஜுடின் கருத்துக்கள் தேச நிந்தனைத் தன்மையைக் கொண்டவை கவனமில்லாதவை என்று லிம் வருணித்தார்.

– பெர்னாமா