இசி எனப்படும் தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக தான் தொடுத்துள்ள வழக்கு அரசமைப்புக்கு உட்பட்டது என பக்காத்தான் ராக்யாட் வலியுறுத்தியுள்ளது.
‘காமன்வெல்த் நாடுகள் அனைத்திலும்’ உச்ச நீதிமன்றங்கள் தேர்தல்
அதிகாரிகளுடைய தவறான தேர்தல் நடத்தை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசையா கூறினார்.
அவர் இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாருக்கு பதில் அளித்தார்.
“நான் இங்கு ஒர் உதாரணத்தை தருகிறேன். யூனியன் பாங்க் ஆப் இந்தியா x ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (2005) 5 SCC 294- அரசமைப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளது,” என்றார் அவர்.
“அது தேர்தல் மனுவாக அந்த வழக்கு சமர்பிக்கப்படவில்லை. தேர்தல் மனு மூலமாக மட்டுமே தேர்தல் முடிவு ஒன்றுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வகை செய்யும் நமது கூட்டரசு அரசமைப்பின் 118வது பிரிவைப் போன்ற ஒரே மாதிரியான விதிமுறையை இந்தியாவும் பெற்றுள்ளது.”
சிவராசா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.