இப்ராஹிம் அலியை அல்விவி-யுடன் ஒப்பிடக் கூடாது

ibrahim‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா  தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறைகூவலை , முஸ்லிம்களை  இழிவுபடுத்தியதாக முகநூல் ஜோடி அல்வின் தான் விவியன் லீ ஆகியோர் மீது  தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ஒப்பிட முடியாது என கோத்தா பெலுட் எம்பி  அப்துல் ரஹ்மான் டாஹலான் கூறியுள்ளார்.

அந்த பைபிள்களில் உள்ள அச்சுப் பிழையை சரி செய்வதற்காகவே தாம்
அவ்வாறு கேட்டுக் கொண்டதாக இப்ராஹிம் ஏற்கனவே விளக்கியுள்ளார் என்றும்  அச்சுப் பிழைகளைக் கொண்ட திருக்குர் ஆன் பிரதிகளை முஸ்லிம்கள்  எரிப்பதைப் போல அச்சுப் பிழைகளைக் கொண்ட பைபிள்களை எரிப்பதே  சரியான நவடிக்கை என்றும் அந்த எம்பி சொன்னார்.

‘அல்விவி’ என அழைக்கப்படும் அந்த ஜோடியின் நடவடிக்கை இன்னொரு  சமயத்தை தாக்கும் நோக்கத்தைக் கொண்டது. அது சமயங்களுக்கு இடையிலான  நல்லிணக்கத்தை பாதிக்கும் என அவர் மேலும் சொன்னார்.

“இப்ராஹிம் சொன்னது வழக்கமானது. ஆனால் அதனை பல இணையத் தளங்கள்  திரித்து பைபிளுக்கு எரியூட்டுவதற்கான அறைகூவல் அது எனச் செய்திகளை  வெளியிட்டு விட்டன. அது சரியல்ல,” எனக் கூறிய அவர் அந்த இணையத்  தளங்களில் மலேசியாகினி இல்லை என்று சொன்னார்.