அகதிகள் வேலை செய்ய அரசாங்கம் ஒப்புதல்

Arumugam_Suaramமலேசியாவில் உள்ள அகதிகள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இடமளிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஜிட் ஹமிடி அறிவித்துள்ளதை வரவேற்பதாக சுவராம் மனித உரிமை கழகத் தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார்.

கடந்த வாரம், செலாயாங் மொத்த வணிக சந்தையைப் பார்வையிட்ட போது தனது அமைச்சு, அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு தூதரகம் மற்றும் குடிநுழைவுத் துறை  (இமிகிரேசன்) துணையுடன் மலேசியாவில் உள்ள அகதிகளுக்கு “அகதிகள்  வேலை வாய்ப்பு” வழங்க முன்வந்துள்ளதை அறிவித்திருந்தார்.

Ahmad_Zahid_Hamidiதற்போது மலேசியாவில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை சுமார் 160,000 ஆகும் என்று குறிப்பிட்ட ஆறுமுகம், அதில் சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு தூதரகத்துடன் பதிவு செய்துள்ளதாகவும் மற்றவர்கள் பதிவற்ற நிலையிலும் உள்ளதாக கூறினார். இதில் பெரும்பான்மையானவர்கள் பர்மா அகதிகளாவர்.

மலேசியாவுக்குத் தேவையான ஆள்பற்றாக்குறையைத் தீர்க்க அரசாங்கம் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது. எனவே, அடைக்கலம் தேடி பணமின்றியும் உடைமைகளின்றியும் வரும் அகதிகளுக்குச்  சட்டப்பூர்வமாக வேலை கொடுப்பதால்  அவர்கள் சார்ந்த பிரச்சனைகளை  ஓரளவு தீர்க்க இயலும் என்றவர், “இந்த கொள்கை மாற்றம் வரவேற்கத்தக்கது, பாரபட்சமின்றி  உடனடி செயலாக்கம் காண வேண்டும்” என வலியுறுத்துகிறார் ஆறுமுகம்.  

erfugeeமலேசியா ஐநாவின் அகதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் புறக்கணித்து வருவது வருந்தத்தக்கது என்று  குறிப்பிட்ட வழக்கறிஞருமான ஆறுமுகம், அவ்வொப்பந்தங்கள்  எப்போது கையெழுத்திடப்படும்  என்பதையும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த ஒப்பந்தங்கள் அகதிகளின் தகுதிகளையும் உரிமைகளையும் வரையறுப்பதுடன் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதையும் தடுக்கின்றன.

“உலக அரங்கத்தில் தன்னை ஒரு பொறுப்புள்ள நாடு என்று காட்டிக்கொள்ளும் மலேசியா, ஐநா மனித உரிமை மன்றத்திலும் உறுப்புநாடாக உள்ளது.  எனவே, அது தனது அனைத்துலகக் கடப்பாடுகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்”, எனவும் ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.