‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ – ஆர்கே ஆனந்த்

MIC-Palani&Subra‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ என்ற முதுமொழி மஇகா  இப்போது எதிர்நோக்கியுள்ள குழப்பத்தை தெளிவாக வருணிக்கிறது.

ஒரு காலத்தில் அந்த நாட்டில் வளம் கொழித்தது. அதற்கு வல்லமையும் செல்வமும் நிறைந்திருந்தது. ஆற்றல் மிக்க மலேசிய இந்தியர்கள் அரசியல்  பெருமக்களாக உயர்ந்து பெரும் செல்வத்தைச் சேர்க்க உதவியது.

ஆனால் 2008ல் எல்லாம் மாறி விட்டது. அந்த நாட்டின் வீரர்களும் அரண்மனை  அதிகாரிகளும் கிட்டத்தட்ட காணாமல் போன நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.  முப்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் மன்னரும் அரியணையிலிருந்து  இறங்கிக் கொண்டார்.

கோலாகலமான சடங்குகளுடன் புதிய மன்னர் அரியணை அமர்ந்தார். வெளிப்படைப் போக்கும் நல்ல ஆளுமையும் கொண்ட புதிய தொடக்கத்தை  அவரது பொறுப்பேற்பு குறிப்பதாக அவருக்கு விசுவாசமான பிரஜைகள்  பறைசாற்றினர்.

ஆனால் அவரும் அந்த நாட்டை முன்னைய பெருமைக்கு கொண்டு செல்ல  முடியவில்லை.

அதற்கு மாறாக அவரது தலைமைத்துவத்தில் முந்திய தேர்தலை விட மோசமான  அடைவு நிலையை அவரது கட்சி பெற்றது. ஒரு காலத்தில் மஇகா-வுக்குப்  பாதுகாப்பான இடம் எனக் கருதப்பட்ட கேமிரன் மலையை வெற்றி கொள்ள  மன்னர் கூடக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

அந்தக் கட்சி தான் போட்டியிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்திலும் 9  நாடாளுமன்றத் தொகுதிகளில் நான்கிலும் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்திய சமூகத்தின் வாக்குகள் ஆளும் கூட்டணி பக்கம் கூடியுள்ளதாக பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக் கூறினாலும் மஇகா-வுக்கும் அதன் தலைவர்களுக்கும் ஏற்றம்  இல்லை.

பிரதமர் கூட பல முறை இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மஇகா-வை ஒதுக்கி விட்டு அரசு சாரா அமைப்புக்களுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் அந்தக் கட்சியின் தலைவர்கள் மிகவும் உயர்வாகப் போற்றிய  இந்திய சமூகம் இப்போது அவர்களை மதிப்பதில்லை. கேலியாகவும் பேசுகின்றது.

வறியவர்கள் இன்னும் அவர்களைச் சார்ந்துள்ளனர். ஆனால் கல்வி கற்ற,  நடுத்தர வர்க்க இந்தியர்கள் ஆகியோரைப் பொறுத்த வரையில் மஇகா தொடர்ந்து  நிலைத்திருக்குமா அல்லது காணாமல் போய் விடுமா என்பது தேவை இல்லாத  விஷயமாகும்.

நிறைய பணயம் வைக்கப்பட்டுள்ளது

ஆனால் மஇகா, அதன் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இன்னும்  தேவைப்படுகின்ற விஷயமாகும். காரணம் அரசாங்கப் பதவிகளும் சலுகைகளும்  குத்தகைகளும், பெருமையும் புகழும் அதில் பணயம் வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே எதிர்வரும் கட்சித் தேர்தல்களை ஒட்டி போர் முரசுகள் கொட்டப்படுகின்றன. அந்தத் தேர்தலில் நடப்புத் தலைவர் ஜி பழனிவேலை  எதிர்த்து துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் களமிறங்கக் கூடும்.

டாக்டர் சுப்ரமணியத்திற்கு இன்னும் செல்வாக்குடன் திகழும் முன்னாள் தலைவர்  எஸ் சாமிவேலுவின் ஆசியும் பல முதுநிலைத் தலைவர்களுடைய ஆதரவும்  இருப்பதாக ஊகங்கள் பரவியுள்ளன.

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல பழனிவேல் கட்சியின் வலிமை  வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து சாமிவேலு புதல்வர் வேள் பாரியை  நீக்கியுள்ளார். அது முன்னாள் தலைவருடைய ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.

பழனிவேல் முன்னாள் துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியத்தின் புதல்வர் சுந்தரை  மத்திய செயற்குழுவுக்கு நியமித்துள்ளார். சுப்ரமணியம் ஆதரவாளர்களை கவரும்  பொருட்டு பழனிவேல் அவ்வாறு செய்துள்ளதாக பார்வையாளர்கள் கூறிக் கொள்கின்றனர்.

இப்போது நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து படுக்கையில் இருக்கும் சுப்ரமணியம், சாமிவேலுவின் பரம எதிரியாக இருந்தார். சாமிவேலு, பழனிவேலை  ஆதரித்ததின் மூலம் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து சுப்ரமணியத்தை  தோல்வி அடையச் செய்தார்.

முன்னாள் பத்திரிக்கையாளரான பழனிவேல், சாமிவேலுவின் முன்னாள்  பத்திரிக்கைச் செயலாளர் ஆவார். தமக்கு பின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என  சாமிவேலும் அறிவித்திருந்தார். தமது எஜமானருடைய நிழலில் பழனிவேல்  உயர்நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போன்று நடப்பு துணைத் தலைவரும் மலாக்காவை சேர்ந்த தோல் மருத்துவ  நிபுணருமான டாக்டர் எஸ் சுப்ரமணியமும் முன்னாள் தலைவரால்  உருவாக்கப்பட்டவர்.

உறுதியாகப் பேசுவதில்லை

இடைக்காலத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றது முதல்  அவ்விரு தலைவர்களும் அரசியல் அரங்கில் தங்கள் முத்திரையைப் பதிக்கவும்  மின்னவும் தவறி விட்டனர். சர்ச்சைக்குரிய பிரச்னைகளை  பூசி  மெழுகுவதையே அவர்கள் நாடினர்.

பழனிவேல் ஆற்றல் இல்லாதவர் என்றும் உறுதியாகப் பேசுவதில்லை என்றும்  அவரைக் குறை கூறுகின்றவர்கள் அடிக்கடி சொல்கின்றனர்.

ஆனால் தீவிர சைவ உணவுக்காரரும் சமயத் தலைவருமான பழனிவேல் ஊடக  வெளிச்சத்தை விரும்பாத அடக்கமான தலைவர் என அவரது ஆதரவாளர்கள்  கூறுகின்றனர்.

மஇகா-வுக்கு யார் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும் மலேசிய அரசியல்  வடிவமைப்பில் அந்தக் கட்சி ஏறத்தாழ விரும்பாத நிலைக்குச் சென்று விட்டது.  அதிசயம் ஏதும் நிகழ்ந்தால் மட்டுமே அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை மாற்ற  முடியும்.

தொப்பியிலிருந்து பூனையை வரவழைக்கும்  மாயவித்தைக்காரனுடைய ஆற்றலைக்  கொண்ட தலைவர் ஒருவரை மஇகா கண்டு பிடிக்க வேண்டும். இல்லை என்றால் மலேசியாவில் மிகப் பழமையான அரசியல் கட்சி ஒன்றின் தலையெழுத்து  தீர்மானிக்கப்பட்டு விட்டது.
___________________________________________________________________

ஆர்கே. ஆனந்த் மலேசியாகினி குழுவில் ஒர் உறுப்பினர்

TAGS: