ஐஜிபி: சுல்கிப்லி மீதான புலனாய்வு நிறுத்தப்பட வேண்டும் என ஏஜி அலுவலகம் உத்தரவிட்டது

zulkfliஇந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக கூறப்பட்ட பெர்க்காசா உதவித் தலைவர்  சுல்கிப்லி நூர்டின் மீதான புலனாய்வு அறிக்கையை போலீஸ் ஏஜி எனப்படும்  சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பித்தது என்றும் ஆனால்  விசாரணையை நிறுத்திக் கொள்ளுமாறு அதற்கு உத்தரவிடப்பட்டது என்றும் ஐஜிபி  என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  தெரிவித்திருக்கிறார்.

“சுல்கிப்லி தொடர்பில் செய்யப்பட்ட எல்லாப் புகார்களும் புலனாய்வு
செய்யப்பட்டன. அதன் முடிவுகள் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்குச்  சமர்பிக்கப்பட்டன,” என்று அவர் சொன்னார்.

“சுல்கிப்லி நூர்டின் விவகாரம் சம்பந்தப்பட்ட வரையில் போதுமான சாட்சியங்கள்  இல்லாததால் புலனாய்வை நிறுத்துமாறு எங்களுக்கு சட்டத் துறைத் தலைவர்  அலுவலகம் ஆணையிட்டது. ஆகவே அடுத்த நடவடிக்கை இல்லை என அந்த  விவகாரம் பின்னர் வகைப்படுத்தப்பட்டது,” என அவர் நேற்றிரவு புக்கிட்
அமானில் நிருபர்களிடம் கூறினார்.

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி சம்பந்தப்பட்டது உட்பட மற்ற விவகாரங்களில் போலீசாருக்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடமிருந்து  இன்னும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் காலித் தெரிவித்தார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பைபிள்களுக்கு எரியூட்டுமாறு  இப்ராஹிம் அலி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுவது மீதான விசாரணையின்  தற்போதைய நிலை குறித்து நிருபர்கள் வினவிய போது காலித் அவ்வாறு பதில்  அளித்தார்.

TAGS: