வரும் மசீச தேர்தலில் கட்சித் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப் போவதாக நடப்பு துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய் அறிவித்துள்ளார்.
மசீச உருமாற்றப் பணிக்குழுவுக்குத் தலைவர் என்ற முறையில் தாம் நாடு முழுவதும் பயணம் செய்து மசீச அடித்தட்டு உறுப்பினர்களுடைய கருத்துக்களைச் செவிமடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
“மசீச குறிக்கோளை அடைவதற்கும் கட்சியைச் சீரமைத்து மேம்படுத்துவதற்குமான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் என்னை வலியுறுத்தியுள்ளனர்.”
லியாவ் சைனா பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என நடப்புத் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளதையும் கருத்தில் கொண்ட பின்னர் தாம் அந்த முடிவைச் செய்ததாகவும் லியாவ் தெரிவித்தார்.