இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற பிரச்சனை

-மோகன் ஷான், தலைவர், மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013.  மத மாற்றத்திற்கு எதிரான விழுப்புனர்வு மாநாடு, தலைமையுரை.

திருச்சிற்றம்பலம்.

mohan shanஉங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், மலேசிய இந்து சங்கத்தின், மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டிற்கு சிரமம் பாராது வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முன்னுரை

பல இன மக்கள் வாழும் இந்த மலேசிய நாட்டில், ஒன்றிற்கும் மேற்பட்ட சமயங்கள் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஆனால், மற்ற சமயங்களுக்கு இல்லாத பெருமை ஒன்று நமது இந்து சமய மதத்திற்கு மட்டுமே உள்ளது. அது என்னவென்றால், தனி மனித சுதந்திரம்.

ஆனால் மற்ற மதங்களில் இப்படிப்பட்ட சுதந்திரம் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் அதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

அண்மைய காலமாக இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற பிரச்சனைதான். பலர் இப்பிரச்சனை குறித்து விழிப்புடன் உள்ளனர். ஆனால், இந்துக்களிடையே பலர் இப்பிரச்சனை குறித்து அலட்சியமாகத்தான் உள்ளனர்.

மலேசிய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தின் பிரிவு 3(1)-வின் படி இஸ்லாம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயமாகும். அதே வேளையில் பிற சமயங்கள் அமைதியாகவும், இணக்கப் போக்கோடும் பின்பற்றுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது உண்மையாகவே பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி. திரைமறைவில் நமது உரிமைகள் நெருக்கப்பட்டு வருகின்றன; நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் தற்போதைய உண்மையாகும்.

மலேசிய நாட்டில், இஸ்லாம் அல்லாதவர்கள் மதம் மாறுவதை தடுப்பதற்கு எந்தவொரு சட்டமும் கிடையாது. ஆனால், மற்ற மதங்களைவிட, இஸ்லாம் மதத்திற்கு மாறும்பொழுதுதான் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.

–     இந்து முறைப்படி நடந்த திருமணம், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு திருமணம் ஒரே நொடியில் தானாகவே இரத்தாகிவிடும்.

–     மதம் மாறிய கணவனின் மீதான உரிமையை மனைவி இழந்து விடுதல்.

–     குழந்தைகள் மதமாற்றப் பிரச்சனைகள் அதிலும் தாயாருக்குத் தெரியாமல் மதமாற்றுவது.

–     சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள்

தாய் அல்லது தந்தை ஒருவருக்குத் தெரியாமல் பிள்ளைகளை மதம் மாற்றி விடுகிறார்கள். எழுதப் படிக்க தெரியாத ஒருவரிடம் ஏதோ ஒரு விண்ணப்ப பாரத்தை நீட்டுகிறார்கள். கையொப்பமிட்டதும் ஒரு நிமிடத்தில் மதம் மாறிவிடுகிறது.

அடையாள அட்டை தொலைந்து போய்விட்டது. புதிதாக செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அடையாள அட்டை வந்தபின் வேறு மதம் என்று உள்ளது. மற்ற மதம் என்று குறிப்பிட்டிருந்தால் கூட நொடியில் மாற்றிவிடலாம். ஆனால் இஸ்லாம் என்று போட்டிருந்தாலோ, தவறு நிர்வாகத்தினரது என்றாலும் நாயாய் பேயாய் அலைய வேண்டியது சம்பந்தப்பட்டவர் ஒருவரே! அவரே கலைத்துப் போய் விடும் அளவிற்கு சிக்கல்கள் ஒவ்வொன்றும் வரிசைப்பிடித்து நிற்கும்.

இதெல்லாம் போதாதென்று மனநோயாளிகளையும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களையும் கூட மதம் மாற்றி விடுகிறார்கள். இதைவிட பெரிய அநாகரீகமான விஷயம் என்னவென்றால், இறந்தவர்களை கூட மதம் மாறி விட்டார்கள் என்று, பிரேதத்தை கூட பறித்துக்கொண்டு போவதுதான்!

அவர்கள் மதத்தை தழுவுவதற்கு ஒரு சில நிமிடங்களே. அவ்வளவு சுலபம். ஆனால் அந்த மதத்தை விட்டு வெளிவர முடியாத அளவிற்கு சிக்கல்கள் தயார் பண்ணி வைத்துள்ளார்கள். சம்பந்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், சட்ட வழக்குறைஞர்கள், இயக்கங்கள் என்று ஏதுமே செய்ய முடியாத அளவிற்கு பல சிக்கல்கள்’ உள்ளன.

பிள்ளைகளின் மதமாற்ற பிரச்சனை மனசாட்சி இல்லாமல் நடந்து வருவது வருத்தப்படும் வகையில் உள்ளது.

-Section 95(b) of the Administration of Islamic Laws (FT) Bill 1993,

“S 95 Bagi maksud Bahagian ini, seseorang yang tidak beragama Islam boleh masuk Islam jika ia sempurna akal dan

(b) Jika ia belum mencapai lapan belas tahun, ibu bapa atau penjaga mengizinkan kemasukannya.”

ஆனால் இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு அர்த்தத்தை மாற்றியுள்ளார்கள். அதாவது,

“(b) jika dia belum mencapai umur lapan belas tahun, ibu atau bapa atau penjaganya mengizinkan kemasukannya.”

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நமக்கு பேரதிர்ச்சியாக உள்ளது ! இருக்கின்ற அனைத்து இந்துக்களையும் வேறு மதத்தினராக மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்வது போல் உள்ளது!

அண்மைய நாடாளுமன்ற கூட்டத்தில் ஷரியா சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து முதல் முறை வாசிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதுவும் அவசரம் அவசரமாக.

ஷரியா நீதிமன்றம் 107 சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட ஆண்-பெண் இருபாலரையும் மதம் மாற்ற தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலர் அனுமதி வழங்கினால் மட்டும் போதும் என்பதே ஷரியா நீதிமன்றத்தின் கோரிக்கை. மேலும், 51(3) (b) (x) and (xi) என்ற சட்டத்தின் கீழ் ஒருவர் முஸ்லீமா? இந்துவா? வேறு எந்த மதத்தையும் சார்ந்தவரா? என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தையும் அது கோரியுள்ளது.

மேற்சொன்னபடி சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மதமாற்றப் பிரச்சனை அதிகரிக்கும் என்பதால், தற்போதைய சிவில் சட்டமே போதுமானது. அதோடு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே அதிகப்படியான அதிகாரங்களை வழங்கப்படும்போது அது பல எதிர்மறையான பிரச்சனைகளையே மேலும் உருவாக்கும்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்ட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் உறுதியிட்டு கூறியது. சமய சர்வ மன்றத்தில் உள்ள அனைத்து சமயத் தலைவர்களும், இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த மசோதாவிற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

அதன்படி இந்த மசோதா அமைச்சரவையால் மீட்டுக்கொள்ளப் பட்டது. பிள்ளைகளின் மத மாற்றத்திற்கு அனைவருக்கும் நியாயமாக இருக்கும் வகையில் மசோதா மீட்டுக்கொள்வதாக அறிவித்தார்கள்.

ஆனாலும் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதாவை அரசாங்கம் மீட்டுக் கொண்டது ஒரு கண் துடைப்பு நாடகமே! காரணம் மாநிலங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுகின்றன.

சிலாங்கூர், திரெங்கானு, பினாங்கு, நெகிரி செம்பிலான் – தாயும் தந்தையும்.

ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் – தாய் அல்லது தந்தை

இப்படி ஏற்கனவே மதமாற்றச் சட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும் போது தற்போது இந்த மசோதாவை மீட்டுக்கொள்வதாக அரசாங்கம் சொன்னது வேடிக்கையாக உள்ளது.

மதம் மாறுவது மட்டுமல்ல, வேறு எந்த முடிவாகட்டும், ஒரு பிள்ளை 18 வயது ஆனபின்பு தான் சுயமான முடிவை எடுக்க முடியும் என்பதுதான் சட்டம். ஆனால் ஷரியா நீதிமன்றச் சட்டம் அதற்கு மாறாக இருப்பதில் நியாயமே இல்லை எனலாம். ஓட்டுப் போடுவதற்கு 21 வயது வேண்டும். கல்யாணம் என்றால் 18 வயது வேண்டும். ஆனால் மத மாற்றத்திற்கு மட்டும் எதுவுமே தேவையில்லையாம்.

புதிதாக இஸ்லாமிய ஆசிய நாகரீகம் எனும் பாடத்திட்டத்தை தனியார் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இதனால் முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று வாயிலேயே உத்தரவாதம் தருகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. காரணம், வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், 1987லில் கொண்டு வந்த ஷரியா சட்டத்தால், முஸ்லீம் அல்லாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று இதேபோல்தான் அன்றைய பிரதமர் வாயிலேயே உத்தரவாதம் கொடுத்தார். இன்று, நாம் மாநாடு கூட்டும் அளவிற்கு பிரச்சனை பெரியதாக உள்ளது.

அல்வீன் தான், விவியன் லீ என்ற இருவரையும் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று சட்ட புத்தகங்களை எல்லாம் புரட்டி பார்த்து, தண்டனை கொடுத்துவிட்டார்கள். அது தவறுதான். ஆகவே தண்டனை கொடுத்தது சரிதான். ஆனால் நம் மதத்தை பழித்தவனுக்கு? நம் மதத்தை இழிவாக பேசிய அந்த சூல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் ஷாஆலாமில் போட்டியிட சீட்! அந்த ஜாகிர் நாயக் என்பவனுக்கு தமிழ் வானொலி பிரிவிலேயே சந்திப்பு நேரமாம்! அதுவும் அவன் சொல்லும் கதைகளை எந்த அளவுக்கு உண்மை என்று கூட விசாரிக்காமல். இதெல்லாம் அநியாயமாக இல்லையா? இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?

சம்பவங்கள்

அண்மையில் நெகிரி செம்பிலானில் நடந்த ஒரு சம்பவம். ஜெலுபுவில் வாழ்ந்து வரும் திருமதி தீபாவின் 8 வயது மகள் ஷர்மிளாவையும், 6 வயது மித்திரனையும் இஸ்லாம் மதத்திற்கு அவருக்கு தெரியாமல் மதம் மாற்றினார் அவர்களது தந்தை. ஏற்கனவே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். ஆகவே அவர்களது சட்டப்படி திருமணம் இரத்தாகிவிட்டது. அப்புறம் எப்படி அவர் தன்னிச்சையாக பிள்ளைகளை கொண்டு போய் மதம் மாற்ற முடியும்? அதுவும் பெற்ற தாய்க்குக்கூட தெரியாமல்? மதம் மாற்றி விட்ட அதிகாரிகள் கூட மனசாட்சியில்லாமல் நடந்து கொண்ட செயல் அருவருக்கத் தக்க வகையில் உள்ளது.

திருமதி தீபா கேட்பதெல்லாம், பிள்ளைகளை மதம் மாற்றுவதில் உரிமை எடுத்துக் கொண்ட அந்த கணவர், பெற்ற பிள்ளைகளின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் உரிமை எடுத்துக்கொள்ளவில்லையே என்பதுதான்!

நீதிமன்ற விளக்கங்களில் கூட ஒரு தெளிவு இல்லாமல் இருப்பது நமக்கு அதிருப்தியை தருகிறது. திருமதி தீபா மட்டுமல்லாது, திருமதி ஷாமளாவின் குழந்தைகள் சம்பந்தமான வழக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. மலேசிய மக்களின் கவனத்தை ஈர்த்த திருமதி இந்திராணி வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதுபோன்ற வழக்குகள் பல இன்னும் முடிவு தெரியாமல் நிலுவையில் உள்ளன. என்ன காரணம்? அவை அனைத்தும் சிவில் நீதிமன்றத்தில் இல்லை; ஆனால் ஷரியா நீதிமன்றத்தில் உள்ளன. ஷரியா நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. அந்த நீதிமன்றத்தில் ஓர் இந்துப் பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அங்கே நமது இன வழக்கறிஞர்கள் எவ்வளவு பேர் இருப்பர்? ஆகவே இதெல்லாம் ஒரு மதத்திற்கே சாதகமாக அமைகின்றது.

கடந்த மாத சம்பவம் ஒன்று. பாசிர் கூடாங்கில் அன்னம்மாள் என்பவரின் கணவர் மதம் மாறி, தன்னையும் தன் பிள்ளைகளையும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் 27 புகார்கள் கொடுத்துள்ளார். அந்த கணவர் இஸ்லாமிய அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி தொல்லை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல் துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டபூர்வமாகத் தன்னை விவாகரத்து செய்யாமல் மத மாற்றத்தில் ஈடுபடச் சொல்லி தொல்லைக் கொடுத்து வரும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் ஐந்து பிள்ளைகளுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாய் தெரிவித்துள்ளார்.

கம்போங் சித்தியவானை சேர்ந்த அர்ஜூனன் என்பவர், வயது 80, 7 பிள்ளைகளுக்கு தந்தையான இவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர். அவருக்கு தெரியாமலேயெ இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 18/6/2013 மஞ்சோங் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து குடும்பத்தினர் பதறியடித்து போய் சென்று பார்த்தால் அவர் பெயர் அப்துல் காசிம் என்று மாற்றப்பட்டுள்ளது.

அலோர்ஸ்டாரில், மனநல பாதிப்பு உட்பட கண் பார்வை பாதிப்பு, டிங்கி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட திருமதி லெட்சுமி, வயது 84, என்பவரை மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற ஒரு நபர், இரகசியமாக மதம் மாற்றியுள்ளார்.

தீர்வுகள்

சமயம் என்பது மனிதனை நல்வழிக்கு செல்ல நெறிபடுத்தும் ஒரு சாதனமாகும். அதுவே சுயநலத்தோடு பலரை வேதனை படுத்தும் ஒரு ஆயுதமாக மாற கூடாது. ஆகவே ஒரு மதமாற்ற சம்பவம் என்பது சம்பந்தபட்ட சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் படி நிகழ வேண்டும். அரசாங்கம், அனைத்துலக சமய மன்றமான MCCBCHST – யுடன், முஸ்லீம் அல்லாதவர்களின் சமய உரிமைகள் குறித்து கலந்தாலோசிக்க முன் வர வேண்டும்.

எப்படி இஸ்லாம் மதத்திலிருந்து வெளிவர பல நிலைகள் கடந்து வர வேண்டி உள்ளதோ, அதேபோல் மற்ற மதத்தினருக்கும் அந்த நிலைகளை ஏற்படுத்தி தர வேண்டும். இந்து மதத்தினர் பிற மதத்தை தழுவுவதற்கு முன்னதாகவே நம்மை சந்தித்து கலந்தாலோசிக்க வாய்ப்பு தர வேண்டும்.

மதம்மாறும் சம்பந்தப்பட்ட நபர்களும் தனது குழந்தைகள், பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் போன்றவரை சற்றே நினைத்து பார்க்க வேண்டும். சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல், தன்னை சார்ந்தவர்கள் அனுபவிக்க போகும் கஷ்டங்களையும் வேதனைகளையும் நிதானமாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

முடிவுரை

மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டங்கள் இந்நாட்டிற்கு வளப்பத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இக்கால கட்டத்தில் கொண்டு வரப்படும் சட்ட விதிகளோ, சுயநல நோக்கத்தோடு உள்ளதுபோலவே தோற்றமளிக்கிறது. குழப்பங்களும் வேற்றுமைகளும் உருவாகுவதற்கு இதுவே காரணமாகி, சம்பந்தப்பட்ட மதத்தை தவிர, பிற மதங்கள் அனைத்தும் விரோதமாக செயல்படுவதுபோல் காட்சிபடுத்தப்படுகிறது.

பிரதமர் என்பவர் இஸ்லாம் சமயத்தின் இறையாண்மையைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தாலும், மற்ற சமயங்களின் நலத்தை காக்க வேண்டிய அவசியமும் அவருக்கு உள்ளது.  ஆதலால் கடந்த பல வருடங்களாக நிலவி வரும் இந்த மதமாற்ற பிரச்சனைகளுக்கு சட்டபூர்வமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். இவற்றை பிரதமர் செய்யும் பட்சத்தில் நமது ஒட்டு மொத்த ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என்பது உறுதி.

நம் நாட்டில் உள்ள இந்துக்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளே மதமாற்றம் நமக்குள் புகுந்து விடுவதற்குக் காரணமாய் உள்ளது. எனவே வேற்றுமைகளை மறந்து இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மதமாற்றம் இனியும் நடக்க கூடாது. மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை இந்துக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இந்து பெருமக்கள் இனியும் ஏமாறக்கூடாது.

இந்து சமயத்தைக் காத்திடுவோம்!

நாம் இந்துக்களாகவே வாழ்ந்திடுவோம்!

நன்றி.

                                                                                                                      திருச்சிற்றம்பலம்.

TAGS: