“இனவாத மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டதற்காக மன்னிப்புக் கேளுங்கள்”

பினாங்கு மாநிலத்தில் உள்ள இரண்டு பொது மருத்துவமனைகளில் மூன்று  மருத்துவர்கள் மலாய் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுப்பதாக தாம் கூறிக்  கொண்டது மீது அம்னோ பினாங்கு துங்கால் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லான்  சைடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என  சுகாதாரத்துக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் அரிப்  பஹார்டின் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று மலேசியச் சீன மருத்துவர்கள்- செபராங் ஜெயாவைச் சேர்ந்த இருவர்,  கெப்பாளா பாத்தாஸைச் சேர்ந்த ஒருவர்- மீது பழி சுமத்தியதற்காக நாடு  முழுவதும் உள்ள மருத்துவர்களிடமும் ரோஸ்லான் மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்றும் அவர் சொன்னார்.

இம்மாதத் தொடக்கத்தில் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் ரோஸ்லான் அந்தக்  குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார்.

“ஆதாரம் எதனையும் அவர் வழங்கத் தவறியிருப்பது அம்னோ தலைவர்
ஒருவருடைய பொறுப்பற்ற போக்கையும் காட்டுகின்றது,” என டாக்டர் அரீப், ஒர்  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.