நஜிப்பை அம்னோ அகற்றினால் – நமது நிலை என்ன?

கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம் 

aru_suaram_rally_2013அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முதன் முதலாக மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற மக்கள் கூட்டணி எதிர்கட்சியாகவும் பெரும்பான்மை வாக்குகளை இழந்த தேசிய முன்னணி ஆளும் கட்சியாகவும் உள்ளன. நியாயமான தேர்தலா என்ற வினா ஒரு புறம் இருக்க, அடுத்த தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழக்கும் என்ற பயம் அம்னோவை ஆட்டி படைக்கிறது. அம்னோ விட்டுக் கொடுக்குமா? அது எவ்வகையில் செயல்படும்? மக்களை வழி நடத்த மக்கள் கூட்டணி அரசியல் விடுதலைக்காக இனவாதமற்ற வகையில் செயலாற்றுவார்களா? மஇகா-வின் நிலை? போன்ற வினாக்களுக்கு என்னதான் பதில்.

தேர்தலும் நஜிப்பின் மிதவாதமும்

நடந்து முடிந்த 13-வது பொதுத்தேர்தலில் மொத்த வாக்குகளில்  சுமார்  47 சதவிகித வாக்குகளை மட்டுமே தேசிய முன்னணி பெற்றது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் உள்ள 222 இடங்களில் 133   இடங்களைக்  கைப்பற்றியதால், பெரும்பான்மையை பெற்று மீண்டும் அது ஆட்சியை அமைத்தது.

blackபெரும்பான்மை வாக்குகளை இழந்த தேசிய முன்னணி இன்னும் பல  இடங்களில் தோல்வி கண்டு ஆட்சியை இழந்திருக்க வேண்டும், ஆனால் தேர்தலைத் தங்களுக்குத்  தகுந்த முறையில் நடத்தி ஆட்சியைக்  கைப்பற்றிக் கொண்டுள்ளது என்பது பொது மக்களின் அனுமானமாக இருப்பதை நாடளவில் நடந்த கருப்பு பேரணிகள் காட்டின.

1najibஒட்டு மொத்த சீனர்களும் பெரும்பான்மை இந்தியர்களும் தேசிய முன்னணியை முதன் முதலாக கூட்டு சேர்ந்த வகையில் புறக்கணித்து உள்ளனர். பிரதமர் நஜிப் ரசாக் அவர்களின் கடுமையான உழைப்பு உடனடியான தகுந்த பலனைத் தரவில்லை. அதற்குக் காரணம் மக்கள் மாற்றம் வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியைப்  பெற்றிருந்ததாகும். விடுதலையடைந்தது முதல் தேக்கி வைத்திருந்த தாகமும் அம்னோ ஆதிக்க அரசின் மீது கொண்ட வெறுப்பும் மாற்றம் கோர மக்களைத் தூண்டியது. ஆனால் அந்த சூழல் உருவாக காரணம் அம்னோவின் பலவீனம் என்ற வாதமும் உள்ளது.

இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அம்னோவின் பேராளர் மாநாடு பல திருப்பங்களைக்  கொண்டதாக அமையும். இதுவரை நடந்த நாட்டின்  பொதுத்தேர்தல்களில் கடந்த தேர்தல்தான் அம்னோவுக்கு ஆட்டம் தருவதாக அமைந்தது. அதற்கு காரணம் நஜிப் அவர்களின் மிதவாதம்தான் என்ற வகையில் வாதாட பல அரசியல் சார்ந்த வலதுசாரி மலாய் அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மகாதீரின் அடக்கு முறை அரசியல்

mahathir1முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் காலத்தில், மலாய் இனத்தின் எதிரிகள் மற்ற இனங்கள்தான் என்ற வாதத்தை முன்வைத்து, மலாய் இனம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் அது தனது ஆட்சி உரிமையையும் அதற்கு சாதகமான சலுகைகளையும் இழந்து விடும் என்று பயமுறுத்தி அரசியல் நடத்தினார். அதற்கு ஒப்பானவர்கள் மட்டுமே அரசியலில் பெயர் போட முடிந்தது. ஓர் இரும்புப்பிடியான ஆட்சியை அமைத்து 2003 வரையில் 22 ஆண்டுகள் மலேசியாவைத்  தனது கையில் வைத்திருந்தார். அவரது காலத்தில்தான் நாட்டின் சமூக பொருளாதாரமும் அரசாங்க அமைப்பு முறையும் அரசியல் ஆதிக்கத்திற்கு ஆளானது.

1isaஉள்நாட்டு பாதுகாப்பு சட்டம், அவசரகால சட்டம், தேச நிந்தனை சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவற்றின் வழி தன்வழியில் குறுக்கிட்டவர்களை அடக்கினார்; சிறையிலடைத்தார்; ஊடகங்களைக் கட்டுப்படுத்தினார்; சீன மற்றும் இந்திய பங்காளி கட்சிகளின் வாயை அடைத்தார்; நீதித்துறையும் மாமன்னர் அதிகாரமும் புதிய அரசமைப்பு மாற்றங்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; தனியார்மயமாக்கும் கொள்கைகள் வழி புதிய மலாய்க்கார கோடிஸ்வரர்களை உருவாக்கினார்.

ஜனநாயகம் என்ற வகையில் மக்களுக்கு இருக்கும்  உரிமை ஓட்டுரிமை. அதன்வழி மக்கள் அரசாங்கத்தைத்  தேர்வு செய்கிறார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை அமைத்த மகாதீர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக்  கொண்டு பணித்துறை அரசாங்க அமைப்புகளைக்  கட்டுப்படுத்தி, சட்டங்களைத் தன்வசமாக்கி சர்வதிகார வகையில் ஆண்டார். அந்த முறையின்வழி ஒரு முழுமையான மலாய் ஆட்சி இயந்திரத்தை நிறுவினார்.

நஜிப்பை அம்னோ ஆதரிக்குமா? 

1bn mah badawiஅவருக்குப் பிறகு வந்த துன் அப்துல்லா படாவி அரசாங்க கொள்கையில் சில மாற்றங்களைத்  தந்தார். சில மனித உரிமைகளை மதிக்கும் வகையில் இருந்தன. அதன் வழி கிடைத்த குட்டிச் சுதந்திர இடைவெளியை (democratic space) அரசியல் சமூக அமைப்புகள் துணிவுடன் பயன்படுத்தின. பெர்சே, பிபிஎஸ்எம்ஐ (PPSMI), ஹிண்ராப் போன்ற பெரிய அளவிலான பேரணிகள் நடந்தன.

அதன் தாக்கம் தேசிய முன்னணி முதன் முறையாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்ததோடு ஐந்து மாநிலங்களின் ஆட்சிகளையும் இழந்தது.

பிரதமர் நஜிப் அவர்கள் தேசிய முன்னணியின் ஆட்சியை மாற்ற கோரி நின்ற  மக்களின் மத்தியிலே போராடி மீண்டும் அமைத்துள்ளார். அதை  அடுத்த தேர்தலில் தற்காக்க இயலுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

umno heavy தேசிய முன்னணியின் உயிர் நாடி அம்னோவாகும். தேசிய முன்னணி பலம் பெற வேண்டுமானால் அது இன்னமும் அதிகமாக இனவாதத்தைக் கையாள வேண்டும். அதோடு மதவாத சிந்தனையை இணைத்து மலாய் இனத்தை வலுப்படுத்த வேண்டும். அதை தற்போது அவ்வளவு இலகுவாக செய்ய இயலாது.

அது கையாளும் வழிமுறைகள் மகாதீர் கையாண்ட வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றால், அது மீண்டும் மற்ற இனங்களை எதிரியாக காட்ட வேண்டும். மற்ற இனங்களுக்குச் செவி சாய்த்து செயலாற்றும் நஜிப்பின் நட்பு முறையை அம்னோ இனியும் ஏற்கும் என்பது சந்தேகம்தான். எனவே நஜிப்பை அம்னோ அகற்றும் சாத்தியம் உண்டு.

அதோடு மட்டுமல்லாமல், மற்ற இனங்கள் அம்னோவுடன் இணைந்து செயல் பட மறுத்தால் அவை அரசாங்க கொள்கைகளால் புறக்கணிக்கப்படுவர் என்ற பயத்தை உருவாக்கும். இவ்வகையான இக்கட்டான சூழலை உருவாக்குவதன் வழி மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ள மலாய் இனத்திடம் தேசிய இனவாதத்தை ஆழப்படுத்தும்.

அம்னோதான் அனைத்தும்

umno leaderகடந்த தேர்தலில் காயமடைந்த தேசிய முன்னணி மக்களின் செல்வாக்கை மீண்டும் பெற அனைத்து இனங்களும் பயனடையும் வகையில் செயல்படும் என்ற நம்பிக்கை நஜிப்பை அகற்றியவுடன், வேறுவகையில் உருமாற்றம் பெறும். அதாவது, முதலில் அம்னோவுக்கு விசுவாசமாக மாறுங்கள்; பிறகு மற்ற இனங்களின் பயன்கள் பற்றி பேசுவோம் என்றமையும். இவ்வகையில்தான் மலாய் இனத்தால் நாட்டை ஆள முடியும் என்பது அம்னோவின் சித்தாந்தம். அதன் அடிப்படையில்தான் நாட்டின் பணித்துறையும் செயல்படும்.

உதாரணமாக பல்கலைக்கழக மற்றும் மெட்ரிக்குலேஷன் நுழைவு, குடியுரிமை, வேலை வாய்ப்புகள், உபகாரச்சம்பளம், தமிழ்ப்பள்ளி, ஆலயம் போன்றவற்றிற்கான  நிதியுதவி ஆகியவை   கட்டுப்படுத்தப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் கட்சி அரசியல் விசுவாசிகளின் வழி கொடுப்பார்கள். அம்னோவுக்கு ஆதரவான மற்ற இனங்களின் கட்சிகளைப்  பழைய அடிமை நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

அம்னோவின் இனவாத நிலைப்பாட்டை நிறுத்த இயலுமா?

அம்னோவின் நிலைப்பாடு போல்தான் அனைத்து இனவாத கட்சிகளும் உள்ளன. மக்கள் கூட்டணி இனவாதமற்றது என்றாலும் அதிலும் இனவாதம் உள்ளதை மறுக்க இயலாது. அதில் உள்ள பாஸ் ஒரு மதவாத சிந்தனை கொண்டது.

pakatanஇருப்பினும், மக்கள் கூட்டணியால் அம்னோவின் நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். அது தனது அரசியல் நடைமுறையை ஜனநாயக வழிமுறையாக்கி அதன்வழி அது ஆட்சி செய்யும் மாநிலங்களில் இனவாதமற்ற கொள்கையை நிறுவ முற்பட வேண்டும். அதன் சமூக பொருளாதார கொள்கைகளை மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும். வேலை வாய்ப்பு, நிதி ஒதுக்கீடு, நிலம், குத்தகை போன்றவை அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் அமைய வேண்டும்.

அரசியல் அடிமையா – அரசியல் விடுதலையா?

இதன்வழி மக்கள் கூட்டணியின் செயலாக்கம், தேசிய முன்னணியின் இனவாத வழிமுறைக்கு எதிரானதாக அமையும். இது போன்ற சூழல் மட்டுமே அனைத்து இனங்களுக்கும் ஒரு புதிய அரசியல் விடுதலையை அளிக்கும்.

anwarஅம்னோ இனவாத கட்சிகளை அடிமைப்படுத்துகிறது ஆனால் மக்கள் கூட்டணி பல்லின மக்களை அதிலிருந்து விடுதலை செய்கிறது என்ற உணர்வு பிறக்கும். மக்கள் கூட்டணியால் அப்படி செயலாற்ற முடியுமா? முடியும் என்பது செயலாக்கம் வழியாகத்தான் காண இயலும்.

மக்கள் கூட்டணியின் கொள்கை எழுத்து வடிவத்திலும் வாய் சொல்லாகவும் மட்டும் இருந்தால் பத்தாது. உண்மையான அரசியல் கடப்பாட்டுடன், துணிவாக செயலாக்க காண வேண்டும். அதைவிடுத்து மற்ற இனங்களுக்குச் சம உரிமை கொடுத்தால் மலாய்க்காரர்களின் வாக்குகள் போய் விடும், மக்கள் கூட்டணி மலாய் இனத்தை விற்கிறது என்று அம்னோ பிரச்சாரம் செய்யும் போன்ற காரணங்களைக் காட்டி மீண்டும் ஓர் இனவாத ஆட்சிமுறையே தொடர்ந்தால் அதனால் பயன் இல்லை.

abuஉரிமை கோரியும், இனவாத அடிமைத்தனத்திலிருந்து மீளவும் போராடும் மக்கள் மலேசியாவைத் தங்களது தாய் நாடாக கருதுகிறார்கள். மலேசியாவை அம்னோவின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க போராடுகிறார்கள். இது ஓர் அரசியல் போராட்டம். இதை மக்கள் கூட்டணி உணர தவறினால், மீண்டும் அம்னோவின் தேசிய முன்னணி தனது வலது சாரி கடப்பாட்டுடன் மக்களை அடிமைப்படுத்தும்.

மஇகா கட்சியின் நிலை என்ன?

mic-logo

அம்னோவின் இனவாத அரசியல் இருக்கும் வரை இந்தியர்களைப்  பிரதிநிதிக்க ஓர் இனவாத கட்சி தேவைதான். மஇகா அந்த இடத்தை நிரப்பி வருகிறது. அடிமைத்தன அரசியலில் அங்கமாகி அதில் மஇகா-வால் அரசியல் விடுதலைப்பற்றிப் பேச இயலாது. இருப்பினும் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இந்தியர்களுக்கான கோரிக்கைகளைக்  கொள்கை அடிப்படையில் தீர்க்க முயல வேண்டும். அம்னோவுடனான அரசியலை நுண்ணியமாக கவனித்து அதனுடனான உறவை மறு பரிசீலனை செய்யத் தயங்கக்கூடாது. பிரதிநிதித்துவம் என்பது உரிமை சார்ந்ததாக இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம், சமயம், வீடு, வேலை, மொழி, பாதுகாப்பு, குடியுரிமை போன்றவை உரிமைகள் சார்புடையவை.
red ic

ஒவ்வொரு முறையும் உரிமைகளைத் தெருப்போராட்டம் வழியாகவும், வாசற்படியில் போய் மனு கொடுப்பது மூலமாகவும் கோருகிறோம். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட அவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது நடைமுறையாக வேண்டும். குடிமக்களுக்கான அரசாங்கம் என்ற நிலையை கோரி மஇகா இந்தியர்களின் சமத்துவத்திற்காக வாய் திறக்க வேண்டும். அதுவே அவர்களது கட்சியின் போராட்டமாக இருக்க வேண்டும். இதை செய்ய தவறினால், அம்னோ தனது மலாய் தேசிய இனவாதத்தைக்  கொண்டு மற்ற இனங்களை நசுக்க முற்படும். மஇகா இருப்பதும்,   இல்லாததும் ஒன்றுதான்.

முடிவு

அம்னோ சார்ந்த வலது சாரி அமைப்புகள் பிரதமர் நஜிப்பின் அனைத்து இனங்களுக்குமான ஆதரவை மறுபரிசீலனை செய்கிறது. மலாய் தேசிய இனவாத கொள்கைக்கு அடிபணியும் தலைவர்கள் மட்டுமே அம்னோவின் தலைவராகவும், தேசிய முன்னணி பங்காளி கட்சிகளின் தலைவராகவும் வர இயலும். அம்னோவின் வழிமுறை மீண்டும் மற்ற இனங்களை அரசியல்  அடிமைத்தனத்திற்குக் கொண்டு செல்லும்.

pakatan-bn-malaysiaஆனால், மக்கள் கூட்டணி ஆட்சி செய்யும் மாநில அரசாங்கம் அனைத்தும் உரிமை அடிப்படையிலும், தேவை அடிப்டையிலும் செயாலாக்க துவங்கினால் மக்கள் ஒரு பொதுவான அரசியல் விடுதலையைப்  பெறுவார்கள். அது அம்னோவின் இனவாதத்திற்குச்  சவாலாக அமையும். மக்கள் கூட்டணியில் உள்ளவர்கள் இனவாத அடிப்படையில் செயலாற்றினால், அது அம்னோவின் அரசியல் வெற்றியாக முடியும்.

தேசிய முன்னணியில் உள்ள மஇகா உரிமைகளைக் கொள்கைகளாக  நடைமுறையாக்க சமத்துவம் கோரி போராட வேண்டும். அந்நிலை மட்டுமே மஇகா-வின் அரசியல் தேவையை நியாயப்படுத்தும்.