புவா: இந்தோனிசிய வங்கி பேரத்தில் ஏற்பட்ட இழப்பை மே பாங்க் சொல்ல வேண்டும்

maybankBII என அழைக்கப்படும் இந்தோனிசியாவின் Bank Internasional Indonesia- வங்கி  பேரத்தை மே பாங்க் பெர்ஹாட் தெளிவாக விளக்க வேண்டும் என டிஏபி எம்பி  டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த பேரத்தில் கிட்டத்தட்ட 1.74 பில்லியன் ரிங்கிட் வரையில் இழப்பு
ஏற்படலாம் என்றும் அது மலேசிய வங்கி முறையைப் பாதிக்கக் கூடும் என்றும்  அவர் சொன்னார்.

2008ம் ஆண்டு அந்த BII வங்கியில் முழுப் பங்கையும் பெறுவதற்காக மே பாங்க்  8.25 பில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தியது.

அந்த இந்தோனிசிய வங்கியின் சொத்து மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு  கூடுதலாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது என அப்போது கூறப்பட்டது.

இந்தோனிசிய வங்கி விதிமுறைகளுக்கு இணங்க கடந்த மாதம் அந்த வங்கியின் 9  விழுக்காடு பங்குகளை மே பாங்க் விற்பனை செய்தது.

அந்த விற்பனையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன்  விளைவாக 157 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவா கூறிக்  கொண்டார்.

நிதி அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த விஷயத்தை நேரடியாகக்  கவனித்து அந்த இழப்புக்கு ‘மோசமான வர்த்தக முடிவு’ காரணமா அல்லது  அதிகார அத்துமீறலா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் புவா  வலியுறுத்தினார்.