இசி என்ற தேர்தல் ஆணையம் அழியா மை குத்தகை தொடர்பில் தூய்மையாக இருந்து தனது நேர்மையை இப்போது நிரூபிக்க வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார்.
அந்தக் குத்தகை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியில் திரும்பச் சுமத்துமாறு இசி விடுத்த சவாலை தாம் நிறைவேற்றி விட்டதாக அவர் சொன்னார்.
“நேர்மை மிகவும் முக்கியமானது என நான் எண்ணுகிறேன். நான் ஆபத்தை ஏற்றுக் கொண்டு அந்தக் குற்றச்சாட்டை நான் நாடாளுமன்றத்துக்கு வெளியில் பல முறை சொல்லி விட்டேன்.”
பொதுத் தேர்தலில் இசி பயன்படுத்திய தரம் குறைந்த அழியா மையை விநியோகம் செய்வதற்கான குத்தகை இசி தலைமைத்துவத்துடன் அணுக்கமான தொடர்புகளைக் கொண்ட நிறுவனக்களுக்கு கொடுக்கப்பட்டதாக பாண்டான் எம்பி-யுமான ராபிஸி கூறிக் கொண்டுள்ளார்.