மீபா: மாணவர் சேர்க்கையில் நஜிப்பின் ‘நம்பிக்கை’ பிரதிபலிக்கப்படவில்லை

najibஇந்திய சமூகத்துக்கு பிரதமர் நஜிப் அதுல் ரசாக் அளித்த வாக்குறுதி, பொதுப்  பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விஷயத்தில்  பிரதிபலிக்கப்படவில்லை என மீபா எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக சங்கம்  கூறுகிறது.

அதனால் மஇகா-வும் ஹிண்ட்ராப்பும் அந்த விவகாரம் மீது ஒரு நிலையை  அறிவிக்க வேண்டும் என மீபா தலைவர் பி சிவகுமார் சொன்னார்.

பிஎன்-னுக்கு வாக்களித்தால் இந்தியர்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்  என்றும் நஜிப் நம்பிக்கை வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொள்வார் என்றும்  அவ்விரு அமைப்புக்களும் இந்தியர்களிடம் குறிப்பாக ஏழை மக்களிடம் உறுதி  அளித்தன என்றார் அவர்.

மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களை வழங்குவதின் மூலம் இந்தியர்களுடைய  கல்வி மேம்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ஹிண்ட்ராப்பும் கூட கூறிக்  கொண்டதையும் சிவகுமார் சுட்டிக் காட்டினார்.

“ஆனால் நஜிப் ‘நம்பிக்கையின்’ கீழ் என்ன பேசப்பட்டது ? சென்ற ஆண்டு
இந்திய மாணவர் எண்ணிக்கை 2.5 விழுக்காடாக இருந்தது. இந்த முறை 4  விழுக்காடு ஆகும்.”

“1970களில் மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த போதிலும்
இந்தியர்களுக்கு பத்து விழுக்காடு இடங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது 27  பல்கலைக்கழகங்கள் உள்ளன. நமக்கு 4 விழுக்காடு தான் கிடைத்துள்ளது.”

மீண்டும் கோட்டா முறையைக் கொண்டு வாருங்கள்

இன அடிப்படையில் இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை மீண்டும்  ஏற்படுத்துமாறு மீபா தலைவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

“பொதுப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடுகளில் நியாயம் கிடைக்க
வேண்டுமானால் கோட்டா முறை மட்டுமே ஒரே வழியாகும்,” என்றும் சிவகுமார்  சொன்னார்.

“தைப்பூசத்திற்குப் பொது விடுமுறையை பெறுவதும் பொழுதுபோக்கு
சகாயங்களைப் பெறுவதும் தான் இந்திய சமூகத்தை பிரதிநிதிப்பதாக கூறிக்  கொள்ளும் தலைவர்களுடைய சாதனைகளாகத் தெரிகிறது.”

கல்வி, அரசாங்க வேலைகள், வர்த்தக வாய்ப்புக்கள், அனுமதிகள் போன்ற மற்ற  விஷயங்கள் முக்கியமானதாகத் தெரியவில்லை. அவற்றின் மீது அந்தத்  தலைவர்கள் போதுமான அளவுக்குக் கவனம் செலுத்துவதில்லை என்றும் மீபா  தலைவர் குறிப்பிட்டார்.