மஇகா-வில் ஒற்றுமை தேவை என்கிறார் மூத்த உறுப்பினர் ஒருவர்

MICமஇகா தலைவர் பதவிக்கு போட்டி நிகழ்வது திண்ணம் என்ற ஆரூடங்கள்  வலுவடைந்துள்ளன. அத்தகைய போட்டி இப்போது நிலைத்திருக்க போராடும்  அந்தக் கட்சிக்கு மரண அடியாக இருக்கும் என பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் ஜி பழனிவேலுக்கு எதிராக நடப்பு துணைத்  தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் களமிறங்குவார் எனக் கூறப்படுகின்றது.

இதனிடையே போட்டியைத் தவிர்ப்பதற்கு உயர் தலைவர்கள் ஒன்றிணைய  வேண்டும் என அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும் ஒழுங்கு  நடவடிக்கைக் குழுத் தலைவருமான கேஎஸ் நிஜார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கால கட்டத்தில் அத்தகைய போட்டியை கட்சி தாங்கிக் கொள்ள முடியாது  என அவர் சொன்னார்.

“மஇகா தலைவர் தேர்தல், போட்டி x ஒற்றுமை” என்னும் தலைப்பில் மலேசியன்  டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறித்து நிஜார் கருத்துரைத்தார்.

“தலைவரும் துணைத் தலைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.  அவர்கள் இருவரும் பொது நன்மைக்காக ஒன்றாக வேலை செய்ய வேண்டும்,”  என்றார் அவர்.

 

TAGS: