கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் இறுதி வெற்றி பெற்றவர்கள் மக்களே என தோல்வி கண்ட பாஸ் வேட்பாளர் சே லோங் என அழைக்கப்படும் அஸ்லான் யூசோப் கூறியிருக்கிறார்.
“எங்கள் தோல்வி எங்களுக்கு வியப்பைத் தரவில்லை. சே லோங் தோல்வி கண்டாலும் கோலா பெசுட் மக்களுக்கு நிறையப் பணம் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 400 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட திட்டங்கள் கோலா பெசுட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
அந்தத் தொகுதியை மேம்படுத்த பிஎன் அளித்துள்ள வாக்குறுதிகள் பற்றியே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவரது தோல்விக்கான காரணங்கள் என்ன என்றும் அவரிடம் வினவப்பட்டது. அந்த இடைத் தேர்தல் “சே லோங்கிற்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் இடையிலான போட்டியை’ போன்றிருந்ததாக அவர் பதில் அளித்தார்.
பிஎன் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அங்கு சென்றிருந்தனர்.
அந்த இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளர் தெங்கு ஜைஹான் சே கூ அப்துல் ரஹ்மான் 8288 வாக்குகளைப் பெற்று பாஸ் வேட்பாளரான சே லோங்கை 2,592 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
இது போன்றவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அறிக்கை விட்டிருக்கும் இவருக்கு எனது பாராட்டுகள்.