ஏ தெய்வீகன்: ‘குளியலறை கேண்டீன் படங்கள் தொடர்பில் தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் என நான் சொல்லவில்லை’

thaiveeganகுளியலறை கேண்டீன் சர்ச்சை தொடர்பில் படங்களைப் பரப்பியவர்கள் மீது  போலீசார் தேசநிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தும் எனத் தாம் சொன்னதாக  கூறப்படுவதை சிலாங்கூர் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ஏ தெய்வீகன்  மறுத்துள்ளார்.

‘குறிப்பிட்ட ஒரு பத்திரிகை’ தம்மை தவறுதலாக மேற்கோள் காட்டி விட்டது என  தெய்வீகன் சொன்னதாக சின் சியூ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தேசநிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக தாம் எதனையும் சொல்லவில்லை என அவர் சொன்னார்.

அந்தப் படங்களை பரப்புவோர் மீது தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட முடியும் என தெய்வீகன் சொன்னதாக நேற்று உத்துசான் இணையப்  பதிப்பு செய்தி வெளியிட்டிருந்தது. அத்தகைய படங்கள் தூண்டி விடக் கூடும் என்றும் இனப்பூசலுக்கு வழி கோலும் என்றும் அவர் எச்சரித்ததாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

உத்துசான் இணையப் பதிப்பை இன்று பார்வையிட்ட போது தெய்வீகன் விடுத்த எச்சரிக்கை தொடர்பான தலைப்பு இன்னும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதன்  உள்ளடக்கம் சம்பந்தமில்லாத இன்னொரு நிலவரம் பற்றியதாக இருந்தது.