சஞ்சீவனை கொலை செய்ய விரும்புவது யார் ? ஏகே ஆனந்த்

sanjeevanதகவல்களை அம்பலப்படுத்தும் ( whistleblower ) ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை  செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உள்துறை அமைச்சும் போலீசும்  சம்பந்தப்பட்டுள்ளனரா ?

அந்தக் கேள்வியை மலேசிய இந்து இயக்கத் தலைவர் எஸ் சஞ்சய்
எழுப்பியுள்ளார்.

குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் மை வாட்ச் அமைப்புத் தலைவர் மீது  சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து சஞ்சய்  அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“அதிகாரத்தில் உள்ளவர்களுடைய தவறுகளை அம்பலப்படுத்துகின்றவர்களை  மௌனமாக்குவதற்கு பயன்படுத்தப்படும் புதிய வழி  என என்னை எண்ணத் தூண்டுகின்றது.”

“இது கடுமையான குற்றச்சாட்டு என எனக்குத் தெரியும். ஆனால் அத்தகைய  எண்ணம் மக்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது,” என்றார் அவர்.sanjeevan1

“நாம் பொது மக்களையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் போலீசும்  உள்துறை அமைச்சும் கடுமையான நம்பிக்கை நெருக்கடியை எதிர்நோக்குகின்றன.”

“நீல நிற உடை அணிந்த மனிதர்கள் தங்களைக் குறை கூறுகின்றவர்கள் விஷயங்களை  அம்பலப்படுத்துவதை தடுக்க எந்த அளவுக்கும் செல்வர் என்னும் தோற்றத்தைப்  போலீசார் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன,” என்றும் அவர்  சொன்னார்.

என்றாலும் தங்கள் புலனாய்வில் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்க மாட்டோம்  என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் வாக்குறுதி  அளித்துள்ளதை சஞ்சய் வரவேற்றார்.

சஞ்சீவன் சுடப்பட்ட சம்பவத்தை போக்கிரி போலீஸ்காரர்களுடன் இணைத்துள்ள  முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுக்கு காலித் பதில்  அளித்தார்.

மூசா மை வாட்ச் அமைப்பின் புரவலரும் ஆவார்.

“காலித் தமது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என நான் நம்புகிறேன் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர் பேசவில்லை என நான் கருதுகிறேன்,” என்றார்  சஞ்சய்.

“போலீசாருக்கும் கிரிமினல்களுக்கும் இடையில் நாம் வேறுபாடு காண முடியாத   நிலையை நாடு எட்டினால் அது கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கும்,”  என்றும் அவர் சொன்னார்.

ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும்

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் சஞ்சய் கேட்டுக்  கொண்டார்.

அண்மைய காலத்தில் மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் பற்றியும் அந்த ஆணையம் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும்  அவர் சொன்னார்.

“அந்தச் சம்பவங்களுக்கு குண்டர் கும்பல் பகைமை காரணம் என அடிக்கடி பழி  போடப்படுகின்றது. ஆனால் யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை. இந்த  இடத்தில் ஏதோ கோளாறு உள்ளது. அவை போலீசாரின் உடனடி  நடவடிக்கைகளா ?” என்று சஞ்சய் வினவினார்.

sanjeevan2போலீஸ் படையில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ள சஞ்சீவன், நெகிரி  செம்பிலான், பாஹாவ்-வில் காரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு  மோட்டார் சைக்கிளோட்டிகள் அவரை நோக்கிச் சுட்டனர்.

29 வயதான அந்த பிகேஆர் அரசியல்வாதியின் உடல் நிலை சீராக இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் சஞ்சீவனுக்குக் கொலை மருட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் அவர் தாக்கப்பட்டார்.

சில குண்டர் கும்பல்கள் தம்மைக் ‘கொல்வதற்கு’ தயாராக இருப்பதாக கூறிக்  கொள்ளும் தகவலை தமக்கு ஜெம்போல் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர்  தெரிவித்தார் என்றும் சஞ்சீவன் ஏற்கனவே கூறியுள்ளார்.