சனிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிர் பிழைத்துள்ள மை வாட்ச் அமைப்புத் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல தமக்கும் தமது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மருட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் படைத் தலைவர் ஒஸ்மான் சாலே சொல்கிறார்.
“அந்தச் சம்பவத்திற்கு 12 மணி நேரம் முன்னதாக சஞ்சீவன் சமூக ஊடகங்களில் அந்த மருட்டல் பற்றி எழுதியுள்ளார். ஆனால் போலீசில் புகார் செய்யவில்லை,” என்றார் அவர்.
ஜெலுபு போலீஸ் நிலைய அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்குக் கிடைத்ததாக கூறிக் கொண்டு சஞ்சீவன் ஜனவரி மாதம் செய்த புகாரை போலீஸ் விசாரித்தது என ஒஸ்மான் தெரிவித்ததாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் அந்த விவகாரம் அரசாங்க வழக்குரைஞருக்கு அனுப்பப்பட்டது. அது ‘மேல் நடவடிக்கை இல்லை’ என வகைப்படுத்தப்பட்டது என ஒஸ்மான் சொன்னார்.
ஜெலுபு விவகாரத்தைத் தவிர சஞ்சீவன் தமது குற்றச்சாட்டுக்களில் தெளிவாக இல்லை என்பதே பிரச்னை என அவர் சொன்னார்.