கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ இளைஞர் பிரிவு, அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா ஆகியவற்றின் உண்மையான நிலை குறித்து டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்..
பாரிசான் நேசனல் இளைஞர் பிரிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த நிரந்தரச் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என இப்போதைய இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் 2009 அக்டோபர் 12ம் தேதி அறிவித்தது குறித்து அவை ஏன் மௌனம் சாதிக்கின்றன என்றும் லிம் வினவினார்.
பிஎன் இளைஞர் தலைவர் என்னும் முறையில் கைரி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
“அம்னோ இளைஞர் பிரிவும் உத்துசான் மலேசியாவும் உண்மையில் வேடதாரிகள். பிஎன் இளைஞர் பிரிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணிக்கும் இடையில் கூட்டணியை அமைத்ததின் மூலம் கம்யூனிசத்தின் பெருமையை உயர்த்திய கைரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்கத் தவறியதின் மூலம் அவை இரட்டைத் தரத்தைப் பின்பற்றுகின்றன,” என்றார் லிம்.
‘புதுக் கிராமம்’ என்னும் திரைப்படம் கம்யூனிசத்தைப் புகழ்கின்றது என்று அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடம் விடுத்துள்ள அறிக்கைக்கு லிம் பதில் அளித்தார்.