மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் கொலை முயற்சிக்குப் பின்னர் செர்டாங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் வேளையில் அவரது நண்பர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.
சஞ்சீவனுடைய சக தோழரும் அந்த குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பின் ஆலோசகருமான எஸ் கோபி கிருஷ்ணன், மருத்துவமனைக்குச் செல்வதைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்துச் செய்து விட்டார். ஆனால் சஞ்சீவனுடைய தந்தையான 64 வயது ராமகிருஷ்ணன் அவ்வாறு இல்லை. அவர் அமைதியாகக் காணப்பட்டார்.
“நான் வயதானவன். என் உடல் உறுப்புக்களுக்கு இனிமேல் எந்த மதிப்பும்
இல்லை,” என அவர் நேற்றிரவு செர்டாங் மருத்துவமனை வளாகத்தில்
நிருபர்களிடம் கூறினார்.
கிரிமினல் நடவடிக்கைகளையும் போலீசாருடன் அதற்கு உள்ள உறவுகள் எனக் கூறப்படும் விஷயங்களையும் அம்பலப்படுத்துவதில் சஞ்சீவன் துணிச்சலாக ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும் போது ராமகிருஷ்ணன் இரும்பு போன்ற தமது உள்ளத்தை மகனுக்கு வழங்கியுள்ளார் எனச் சொல்லலாம்.
கிரிமினல் வழக்குரைஞராக 30 ஆண்டுகளுக்கு மேலாக ராமகிருஷ்ணன் தொழில் செய்து வருவதும் குற்றச் செயல்களுக்கு எதிரான சஞ்சீவனுடைய போராட்டத்திற்கு ஊக்கத்தை கொடுத்திருக்க வேண்டும்.
“சஞ்சீவன் என்னிடம் மை வாட்ச் பற்றிக் கூறியுள்ளான். அவன் செய்வது எனக்குத் தெரியும். நான் அப்போது கவலைப்படவில்லை.”
“அவனைத் தாக்குவதற்குச் சிலர் விரும்பக் கூடும் என்று தான் நான்
எதிர்பார்த்தேன். என் மகனை சுடும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வரும் என நான் எண்ணவில்லை.”
ஏற்கனவே சஞ்சீவன் மீது ஹோட்டல் அடித்தளம் ஒன்றில் பாராங் கத்திகளை வைத்திருந்தவர்கள் தாக்கியுள்ளனர். செப்பாங்கில் உள்ள குறைந்த கட்டண விமான முனையத்தில் அவரைச் சந்தேகத்துக்குரிய நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நெகிரி செம்பிலான் பாஹாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் சஞ்சீவனைச் சுட்டதாகக் கிடைத்த தகவல் குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சஞ்சீவன் நான்கு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு விட்டார். விலா எலும்புப் பகுதியிலிருந்து குண்டை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக இப்போது அவர் செர்டாங் மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
“கடந்த மூன்று நாட்களாக நாங்கள் மருத்துவமனைகளில் தூங்குகிறோம்,” என ராமகிருஷ்ணன் சொன்னார்.
இப்போதைக்கு சஞ்சீவனுக்கும் அவரது குடும்பத்துக்கும் மருத்துவனை தான் பாதுகாப்பான இடமாகத் தெரிகின்றது.
சஞ்சீவனைப் பார்ப்பதற்கு அவருடைய பெற்றோர்களும் உடன்பிறப்புக்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள் அவருடைய அணுக்கமான நண்பர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
குண்டர்களுக்கும் போலீசுக்கும் உண்மையிலேயே தொடர்பு உள்ளதா?