மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவனை ‘நண்பர்கள்’ சுட்டனர். கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைக்காரர்கள் அல்ல எனத் தாம் சொன்னதாகக் கூறும் செய்தியை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார்.
விசாரணைகள் தொடருகின்றன என்று மட்டுமே தாம் குறிப்பிட்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அந்த விவகாரம் மீது விசாரணையை முடிக்க எங்களுக்கு கால அவகாசம் தாருங்கள் என நான் நேற்று நிருபர்களிடம் சொன்னேன். அவ்வளவு தான்.”
“அந்தச் செய்தியை வெளியிட்ட செய்தி இணையத் தளத்திலிருந்து விளக்கம் கோருமாறு நான் எங்கள் பொது உறவுத் துறைக்குப் பணித்துள்ளேன்,” என்றும் காலித் சொன்னார்.
அந்தச் சம்பவத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை போலீஸ் தலைவர் நிராகரித்ததாக Free Malaysia Today என்ற அந்தச் செய்தி இணையத் தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் சஞ்சீவனுடைய நண்பர்கள் இருப்பதாகவும் அவர் சொன்னதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.