கி. சீலதாஸ். செம்பருத்தி.காம் .மூத்த வழக்கறிஞர் சீலதாஸ் அவர்களின் இந்தச் சட்ட ஆய்வுக்கட்டுரை நுண்ணியமாக எழுதப்பட்டுள்ளது. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இது, மதமாற்றம் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆராய்கிறது – முதல் பகுதி
உரிமை உள்ளதா?
நம் உரிமைகள் எனும்போது, நமக்கு இருக்கும் உரிமைகள்; நமக்கு உறுதி செய்யப்பட்ட உரிமைகள்; அதே சமயத்தில் அந்த உரிமைகளைப் பாதுகாக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா என்பதை ஆய்ந்து பார்க்கவேண்டும்.
உரிமைகள் என்று சொல்லும்போது நாம் அரசியல் சட்டத்தைத் தான் பார்க்கிறோம் (அரசமைப்பு சட்டம் என்றும் கூறலாம்) ; காரணம், நம் உரிமைகளை உறுதிச் செய்தது இந்த நாட்டின் அரசியல் சட்டம்தான். அதுவே இந்த நாட்டின் உயரியச் சட்டம். அந்த உயரியச் சூரியனைப் போன்ற அரசியல் சட்டத்திலிருந்து உதிர்வனவாம் கதிர்கள் போன்ற மற்றச் சட்டங்கள் யாவும். இனப் பாதுகாப்பு, மொழி பாதுகாப்பு, சமயப் பாதுகாப்பு அனைத்தும் அரசியல் சட்டம் எனும் சூரியக் கதிர்போல் பிறப்பனவாம்.
அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவமே நாட்டில் சட்ட ஒழுங்கு நிலவ வேண்டும் என்பதோடு, சட்ட ஒழுங்குக்கான அடிதளத்தை அமைத்துத் தருவதாகும்.
சட்ட ஒழுங்கு முக்கியமானது எனினும் அதன் வழியாக நாட்டில் சுபிட்சம், மக்களுக்கு மகிழ்வான வாழ்க்கை ஆகியன சென்றடைவதை அரசியல் சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தை இந்நாட்டு மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்றாகும். அதில் புதைந்துகிடக்கும் பாதுகாப்புகளை நாம் உணர்ந்திருக்காவிட்டாலும், அறிந்திருக்காவிட்டாலும் அந்த பாதுகாப்புகளை எளிதில் தள்ளிவிட முடியாது – தள்ளிவிடக்கூடாது. அப்படிப்பட்ட காரியங்களில் இறங்குவோர் அரசியல் சட்டம் வடிவம் பெற முயற்சித்த எல்லோருடைய நல்லெண்ணத்தையும் அவமதிப்பதாகக் கருதப்படும்.
அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்?
அரசியல் சட்டத்தைப் பற்றி பேச்சு வார்த்தை நிகழ்ந்த போது எல்லா இனத்தவரும் அதில் பங்கு பெற்றனர். இந்தச் சரித்திர உண்மையை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டப் பேச்சு வார்த்தை நடந்த போது பிரிட்டிஷாரும் எல்லா இனங்களையும் பிரதிநிதித்த கூட்டணி அரசியல் இயக்கமும் கலந்து பல இனங்களின் நலனையும், பாதுகாப்பையும் முன்வைத்து நல்லதொரு முடிவின் வடிவே இந்நாட்டு அரசியல் சட்டம்.
அந்தக் கூட்டணியில் அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசியா இந்தியர் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. எல்லா மலாய் மாநிலங்களின் சமஸ்தானாதிபதிகளும் கலந்து கொண்டனர். எனவே, தீர ஆலோசித்து, விவாதித்து ஒப்புக்கொள்ளப்பட்டதுதான் மலாயா (பிறகு மலேசியா) அரசியல் சட்டம்.
இதில் நாம் ஏமற்றப்பட்டோமா?
இங்கே கவனத்தில் இருத்திக் கொள்ள வேண்டியது என்ன வென்றால், எல்லா தரப்பினரும் மனப்பூரவமாகப் பேசி ஒரு தீர்வை ஏற்றுக்கொண்டதாகும். இதில் யாரும் ஏமாற்றப்படவுமில்லை. ஏமாறுவதற்கு இடமுமில்லை. ஏமாற்றப்பட்டனர் என்று பேச்சு எழுமானால் அது சமீபகால நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.
யாரும் ஏமாற்றம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எல்லோருடைய தலையாய பொறுப்பாகும். யாரும் எக்காலகட்டத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் ஏமாறக்கூடாது என்ற உன்னத நோக்கோடுதான் அரசியல் சட்டத்தில் எல்லா இனத்தவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பெற்றது.
அதே சமயத்தில் கூட்டணி, மாநில சமஸ்தானாதிபதிகள் மட்டும் பிரிட்டிஷாரோடு பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. மற்ற அரசியல் இயக்கங்களின் கருத்துகளைக் கேட்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாததின் கரணம் என்ன? என்பதே அது.
பிரிட்டிஷ் அம்னோவை தேர்வு செய்தது
அந்தக் காலகட்டத்தில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள்தான் கூட்டணியில் அங்கம் வகித்தன. அந்தக் கூட்டணிக்குத் தலைமைப் பொறுப்பை அம்னோ ஏற்றுக்கொண்டிருந்தது. இது பிரிட்டிஷ் காலனிவாதிகளுக்குத் திருப்திப்படுத்தும் அரசியல் இயக்கமாகக் கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியல் சட்டத்தின் நோக்கங்களில் நாட்டு மக்களின் நலனும் மகிழ்வும் அதில் அடங்கும். அப்படிப் பார்க்கும் போது அரசியல் சட்டத்திற்கு இணங்க இயற்றப்படும் சட்டங்கள் மக்களின் மகிழ்வை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதில் நாடாளுமன்றமும் மற்றும் எல்லா மாநில சட்ட மன்றங்களும் மனதில் இருத்தி செயல்பட வேண்டும் என்பது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.
முக்கியமான பிரச்சினைகளை ஆய்வு செய்யும்போது நாட்டில் நடந்த சில உண்மையான நிகழ்வுகளை நம் மனதில் கொண்டிருக்கவேண்டும். எனவே, இந்த ஆய்வின் போது சிலரை பாதித்த வழக்குகளைக் கவனிப்போம். அப்படிப்பட்ட நிகழ்வுகள் பிறப்பின் பலனை அனுபவிக்க உதவியனவா, அரசியல் சட்டம் உதவியதா அல்லது புறக்கணிக்கப்பட்டதா என்பதை ஆய்ந்து பார்க்க உதவும்.
(தொடரும்)
இப்படிப்பட்ட தரமான கட்டுரைகளை வரவேற்போம். அரசியல் சாசனம் வரையப் படுமுன் பல இயக்கங்கள் தத்தம் கருத்துக்களை ‘Reed Commission’ முன் வைத்தன. ஆனால் நம் இனத்தவர்கள் கருத்து தெரிவித்தது மிக குறைவே. இதற்க்கு பல சரித்திர மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளே காரணமாக இருந்துள்ளன. அடுத்த பதிப்பில் இதையும் கொஞ்சம் ஆராய்ந்து எழுதுங்கள். நன்றி.